டி20 கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக 344 ரன்கள் எடுத்து ஜிம்பாவே அணி உலக சாதனை செய்துள்ளதை அடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
டி20 உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற்ற நிலையில், இன்று ஜிம்பாவே மற்றும் காம்பி அணிகள் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா 43 பந்துகளில் 133 ரன்கள் எடுத்தார் என்பதுடன், 15 சிக்ஸர்கள் மற்றும் ஏழு பவுண்டரிகள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து, 345 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய காம்பி அணி அனைத்து விக்கெட்டுகளும் வெறும் 54 ரன்களுக்கு இழந்ததால், ஜிம்பாவே அணி 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி20 வரலாற்றில் இதுவரை 344 ரன்கள் எந்த அணியும் குவிக்கவில்லை. கடந்த ஆண்டு 314 ரன்கள் நேபாளம் அணி எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்த சாதனையை இன்று ஜிம்பாவே அணி 344 ரன்கள் எடுத்து உலக சாதனையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.