மலையாள சினிமாவில் போதைப்பொருள் பழக்கம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சமீபமாக அதில் சர்ச்சைக்குரிய வகையில் சிக்கியுள்ளார் பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ.
மலையாளத்தில் பிரபலமான நடிகராக உள்ள ஷைன் டாம் சாக்கோ, தமிழில் குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமாக உள்ளார். சமீபத்தில் ஷைன் டாம் சாக்கோ ஒரு படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை வின்சி அலோசியஸ் அளித்த புகார் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு ஆடம்பர நட்சத்திர விடுதியில் போதைப்பொருள் தடுப்பு போலீஸார் சோதனை செய்தபோது, அங்கு தங்கியிருந்த ஷைன் டாம் சாக்கோ 3வது மாடியில் இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து போலீஸார் சம்மன் அனுப்பிய நிலையில் ஷைன் டாம் சாக்கோ காவல்நிலையத்தில் ஆஜராகியுள்ளார்.
முதலில் தன்னை யாரோ தாக்க வருவதாக நினைத்து தப்பி ஓடியதாக அவர் மலுப்பினாலும், போலீஸார் தகுந்த ஆதாரங்களை காட்டியதால் தான் அங்கு போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஏற்கனவே நடிகையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கு உள்ள நிலையில் தற்போது போதைப்பொருள் வழக்கும் அவர் மீது பதியப்பட்டுள்ளது மலையாள சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K