Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா!

J.Durai
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:44 IST)
3S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் 'ஆலன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
 
இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆலன்' எனும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, அனு சித்தாரா, கருணாகரன், விவேக் பிரசன்னா, 'அருவி' மதன் குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விந்தன் ஸ்டாலின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா இசையமைத்திருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் வழங்குகிறார். 
 
இந்நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர் கே. பாக்யராஜ், தயாரிப்பாளர் டி. சிவா, இயக்குநர் கோபிநாத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 
 
இந்நிகழ்வில் 
கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில்......
 
படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரான சிவா என்னுடைய சிறந்த வாசகர். அவரும் ஒரு எழுத்தாளர். என் இனிய நண்பர். அவரைப் பற்றிய ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர் எழுதிய புத்தகம் ஒன்று இம்மாதம் வெளியாகிறது. அதை என்னுடைய உயிர்மை பதிப்பகத்தில் இருந்து தான் வெளியிடுகிறோம். அவர் எழுதிய புத்தகத்தை வாசிக்கும் போது அவர் ஒரு மிக முக்கியமான எழுத்தாளர் என்பதை உணர்ந்தேன். அவருடைய எழுத்தில் நகைச்சுவை... எழுத்து நடை..
கூர்மையான சமூகப் பார்வை... என பல அம்சங்களும் அவருடைய சிறுகதை தொகுப்பில் இருக்கிறது. 
 
அவருக்குள் இருக்கும் சினிமா பற்றிய கனவு பெரியது. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை அவர் சொல்ல கேட்டிருக்கிறேன். சினிமா என்கிற கலை மீது அவர் அடங்காத அன்பினை கொண்டிருக்கிறார்.‌ இவரைப் போல் பலர் தமிழகத்திற்கு வெளியே இருக்கிறார்கள். 
 
தான் சம்பாதித்த பணத்தை வைத்து ஒரு நல்ல படமாக வழங்க வேண்டும் என நினைக்கிறார். சமூகத்துக்கு நல்லதொரு செய்தியை சொல்லும் படைப்பாக தர வேண்டும் என நினைக்கிறார். சினிமாவில் சமூக பொறுப்புணர்வு உள்ள படைப்பாளியாக வரவேண்டும் என விரும்புகிறார்.‌ இதனை அவரிடம் நடந்த தொடர் உரையாடல்கள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். 
 
இந்தப் படத்தில் நானும் என்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். அந்த தருணத்தில் நண்பருடன் இருக்கிறேன் என்ற உணர்வு தான் எழுந்தது. 
 
அவருடைய கனவுகள் வெல்லட்டும். இந்தத் திரைப்படம் தனஞ்செயன் வழங்குகிறார் என்ற உடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அவர் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் இந்த திரைப்படத்திற்காக மேற்கொள்வார். 
 
நாங்கள் கல்லூரி மாணவர்களுக்காக அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திரைக்கதை எழுதுவதற்கான பயிற்சி குறித்த பட்டறையை மூன்று நாள் நடத்தினோம். அந்த நிகழ்வில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் அனைத்து நட்சத்திர இயக்குநர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். அனைவரும் திரைக்கதை மன்னன் கே. பாக்யராஜ் பற்றி பேசினார்கள்.  அவர் திரைப்படங்களை இயக்கி நிறைய ஆண்டுகள் ஆகிவிட்டது. இருந்தாலும் இன்றும் அவரைப் பற்றி ஏன் பேசுகிறார்கள்? அவரைக் கடந்து திரை கதையை பற்றி பேசுவதற்கு வேறு நபர் ஏன் இல்லை? என்ற விசயம் எனக்கு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. அவர் இயக்கிய காலகட்டத்தில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்திருக்கிறார் என்பதை தற்போது உணர முடிகிறது. அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கும் இந்த மேடையை நானும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படம் வெற்றி பெறட்டும். தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் நண்பர் சிவா வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்'' என்றார். 
 
தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில்......
 
தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர். சிவாவின் பேச்சில் சமூக அக்கறை தெரிந்தது. அவருடைய நல்ல எண்ணத்திற்காகவும், நோக்கத்திற்காகவும் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று அவர் தொடர்ந்து திரைப்படங்களை இயக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.  
 
தமிழ் திரை உலகில் நிதானமாக பயணித்து நல்லதொரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நடிகர் வெற்றிக்கு இந்த திரைப்படம் மிக முக்கியமான திரைப்படமாக இருக்கும். அவர் நடித்த முதல் படமான எட்டுத் தோட்டாக்கள் என்ற படத்தில் நான் நடித்திருக்கிறேன். மிகவும் நல்ல மனிதர். தனக்கு எந்த கதை பொருத்தமாக இருக்கிறதோ...! அதனை தேர்வு செய்து நடித்து வருகிறார். 
 
அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணாவிற்கும், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தனஞ்செயன் எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அவர் இணைந்திருக்கும் இந்த ஆலன் படத்திற்கும் அவர் உச்சபட்ச உழைப்பை வழங்கி இந்தப் படத்தில் வெற்றிக்கு பாலமாக இருப்பார். '' என்றார். 
 
நடிகர் வெற்றி பேசுகையில்.....
 
ஆலன் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் - தயாரிப்பாளர் சிவாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 
 
தொடர்ந்து திரில்லர் திரைப்படங்களை தான் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு காதல் படத்தில் நடிப்போம் என்று யோசித்து கொண்டிருக்கும்போது.. சிவா சார் இப்படத்தின் திரைக்கதையை என்னிடம் கொடுத்தார். படித்தவுடன் இரண்டு விசயங்கள் தான் எனக்குள் தோன்றியது. இந்தப் படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரிக்க முடியாது. பிரம்மாண்டமாக பெரிய பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். அடுத்ததாக இசையமைப்பாளர் திறமையானவராக இருக்க வேண்டும் என நினைத்தேன். காதல் கதை என்பதால் இது முக்கியம் என தயாரிப்பாளிடம் சொன்னேன். அவரே இயக்குநர் என்பதால் அவருடைய கற்பனைக்காக செலவு செய்ய தயாராக இருந்தார். படத்தினை கஷ்டப்பட்டு தான் உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்த சக கலைஞர் அனைவரும் நன்றாக தங்களுடைய உழைப்பை வழங்கி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா சிறந்த இசையை வழங்கி இருக்கிறார். இது போன்ற புதிய முயற்சிகளுக்கு ஆதரவு அளியுங்கள்'' என்றார். 
 
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில்......
 
இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓம் நமச்சிவாய' என்ற பாடல் ஒலித்தது. ஓம் நமச்சிவாய என்றவுடன் அது ஆன்மீகமாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்ப்பை பொய்யாக்கி, அதை ஒரு கமர்ஷியல் ரிதமாக மாற்றி இசையமைத்திருந்தார் அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் கிருஷ்ணா.  இதையே பிரமிக்க வைக்கும் வகையில் உருவாக்கி இருந்தார் என்றால் படத்தில் அனைத்து பாடல்களையும் அவர் சிறப்பாக உருவாக்கி இருப்பார். அதனால் இந்த தருணத்தில் அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 
 
சிறிய முதலீட்டு திரைப்படங்களை திரையரங்கத்திற்கு கொண்டு வருவதில் பெரு முயற்சி செய்து வருபவர் தனஞ்செயன். அவர் இந்தப் படத்திலும் இணைந்திருப்பதற்காக அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
வெற்றி என்று சொன்னால் வித்தியாசமான கதையை தேர்வு செய்து நடிப்பவர் என்ற ஒரு எண்ணம் அனைவரிடத்திலும் இருக்கிறது எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது. இவர் எல்லா படங்களையும் ஒப்புக்கொண்டு நடிப்பவர் அல்ல என்பது ரசிகர்களுக்கும் தெரியும். ஏதாவது வித்தியாசம் இருந்தால் தான் இவர் நடிக்க ஒப்புக் கொள்வார் என்பதால்...  அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஆலன் திரைப்படம் வித்தியாசமாக இருக்கும்.  இந்தப் படத்தை தேர்வு செய்து நடித்ததற்காக நடிகர் வெற்றிக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது இந்த வெற்றிப் பயணத்தை மாற்றிக் கொள்ளாமல்... புதிய முயற்சிக்கு மேற்கொள்ளுங்கள். இதுவும் காதல் கதை தான். ஆனால் இதிலும் கமர்ஷியல் கலந்திருக்கிறது. 
 
பிரிவு என்ற தலைப்பில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.  தமிழ் மொழியில் அடுத்தவருடைய திறமைக்காக அவர் சேவை செய்து  கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலந்து கொண்ட திரைக்கதை எழுவது குறித்து எழுதுவது குறித்த பயிற்சி பட்டறையில் என்னைப்பற்றி அனைத்து இயக்குநர்களும் பேசியதாக குறிப்பிட்டார். அதை கேட்பதற்கு பெருமிதமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இவை அனைத்தும் எங்களுடைய குருநாதர் பாரதிராஜாவுக்குத்தான் சேரும். ஏனெனில் அவர் இல்லை என்றால் நான் இல்லை. 
 
இங்கு பேசியவர்களில் பாடல் ஆசிரியர் கார்த்திக் நேத்தா பேசியது எனக்கு புரியவில்லை. இருந்தாலும் ரசித்தேன். அவர் முதலில் எழுதிய கவிதை என்று ஒரு கவிதையை வாசித்தார். அது எனக்கு புரியவே இல்லை. ஏனென்றால் சொற்கள் புதிதாக இருந்தது. பிறகு பத்து வருஷம் கழித்து கவிதை எழுதினேன் என்றார். அதுவும் எனக்கு புரியவில்லை. ஆனால் இறுதியில் ஒரு கவிதையை வாசித்தார். அது எளிதாக இருந்தது . அனைவருக்கும் பிடித்திருந்தது.  
 
தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவாவிற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். பேரும் புகழும் வேண்டும் என்பதற்காக திரைத்துறைக்கு வருவார்கள் அல்லது சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக வருவார்கள். நானும் பேரும் புகழுக்காக தான் திரைத்துறையில் நுழைந்தேன். அதன் பிறகு சம்பாத்தியம் கிடைத்தது. ஆனால் இந்த இரண்டு விசயத்தை கடந்து வேறு ஒரு விசயம் இருக்கிறது என்பதை சிவா சொல்லும்போது.. மிகவும் நெகிழ்வாக இருந்தது. சமூக சேவைக்காக சினிமாவை தேர்ந்தெடுத்து இருக்கிறார் என்றதும் அவர் மீது எனக்கு மரியாதை வந்தது. 
 
குடும்ப சூழல் காரணமாக சிங்கப்பூருக்கு சென்று அங்கு சம்பாதித்து, சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து, மேலும் சம்பாதிக்க வேண்டும் என நினைக்காமல்... சினிமாவில் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ.. அதை ஆத்மார்த்தமாக செய்வதற்காக ஆலன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். நஷ்டத்தை பற்றியோ அல்லது வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். 
 
அவருடன் பேசும்போது எழுத்தாளர்களுக்கு சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாட்டில் நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் இங்குதான் எழுத்தாளர்களுக்கு உரிய மரியாதை இல்லை என குறிப்பிட்டார். அந்த ஆதங்கத்தின் காரணமாகவே இந்த படத்தின் நாயகன் வெற்றியை ஒரு எழுத்தாளராக நடிக்க வைத்திருக்கிறார்.  
 
உண்மையில் கதை என்பது நம்முடைய வாழ்வில் இருந்து எடுப்பதுதான். ஒவ்வொருவரும் கதாசிரியர்கள்தான் அவர்களுடைய வாழ்க்கையில் பாதித்த விசயத்தை நினைவு படுத்தி எழுதினால் அதுவே சிறந்த கதையாக இருக்கும். 
 
சினிமாவிற்கு வரும்போது ஒன்று அல்லது இரண்டு கதைகள் உடன் வந்தால் போதும். அதன் பிறகு இங்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து கதையை உருவாக்கிக் கொள்ளலாம். என்னிடம் முதலில் சுவரில்லாத சித்திரங்கள் கதை மட்டும் தான் இருந்தது. அதன் பிறகு தான் ஒரு கை ஓசை படத்தின் கதை உருவானது. அதன் பிறகு மௌன கீதங்கள்... இப்படி படிப்படியாக அனுபவங்களின் மூலம் கதைகளை உருவாக்கினேன். 
 
நம் வாழ்க்கையை பார்ப்பதும் ஒன்றுதான். புத்தகங்களை படிப்பதும் ஒன்றுதான். ஏனெனில் ஒருவன் தன் வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை சந்தித்திருக்க முடியாது. ஆனால் புத்தகங்களை படிக்கும் போது தான் அந்த கதாசிரியர் .. அவருடைய வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி இருப்பார். 
 
நான் என் வாழ்க்கையில் காண்டேகர் கதைகள் ,ஜெயகாந்தன் கதைகள், கல்கியின் கதைகள் ஆகியவற்றை படித்திருக்கிறேன். இது போன்ற ஏராளமான புத்தகங்களை படிக்கும் போது புதிய புதிய கதாபாத்திரங்கள் கிடைக்கும்.  
 
அதேபோல் கடைசி வரை கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். கடைசி வரை நாம் கற்றுக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விசயம் இருந்து கொண்டே இருக்கும். இன்று கூட ஆலன் என்றால் என்ன? என்று எனக்குத் தெரியவில்லை. இது தொடர்பாக சிவாவிடம் கேட்டபோது ஆலன் என்றால் சிவன் என்றார்.  இது எனக்கு ஒரு புது விசயமாக இருந்தது.
 
இந்தப் படம் காதலும் ஆன்மீகமும் கலந்த படம். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் ஒரு வசனம் வரும். 'எதை நீ அதிகமாக நேசிக்கிறாயோ.. அதுவே ஆன்மிகம். ' இதுவும் என்னைக் கவர்ந்தது.
 
சேவை மனப்பான்மையுடன் திரைத்துறைக்கு வருகை தந்திருக்கும் சிவா வெற்றி பெற வேண்டும். இந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு அன்பின் வலிமை புரிய வேண்டும் என இயக்குநர் சிவா விரும்பி இருக்கிறார். தூய்மையான ஆன்மீகம் என்பது அன்பு என்பதையும் சொல்லி இருக்கிறார். எனவே சிவாவின் ஆலன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சமரச பேச்சுவார்த்தையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ரிலீஸ் வேலைகளைத் தொடங்கிய ‘விடுதலை 2’ படக்குழு!... முதல் சிங்கிள் அப்டேட்!

காஞ்சனா 4 வேலைகளைத் தொடங்கிய ராகவா லாரன்ஸ்… இவர்தான் ஹீரோயினா?

லியோ, வேட்டையனைக் கடந்த கங்குவா வசூல்… எங்குத் தெரியுமா?

கங்குவா படத்தின் முதல் நாள் கலெக்‌ஷன் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments