நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ரம்யா சுப்பிரமணியன், சமூக வலைதளங்களில் தனது வீடியோக்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் தவறாக பயன்படுத்தி வெளியிடுபவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இனிமேல் இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய “ஓகே கண்மணி” உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ள ரம்யா, விஜே பணி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். சமூக வலைதளங்களில் தொடர்ந்து செயல்படுவதாக அறியப்படும் இவர், இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு மில்லியனைத் தாண்டும் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலமாக, பல்வேறு பிரபலங்களின் வீடியோக்களை எடுத்து, அவற்றில் குரல் மற்றும் முக அமைப்புகளை ஏஐ மூலம் மாற்றி, அவற்றை தவறான நோக்கில் வெளியிடும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதே போல, ரம்யாவின் வீடியோவும் அவ்வாறு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரம்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்ட கருத்தில், “இது மூன்றாவது முறையாக என் வீடியோ தவறாக பயன்படுத்தப்படுகிறது. இது சட்டத்துக்கு விரோதமானதோடு, என் தனிப்பட்ட உரிமைகளை முற்றிலும் மீறுகிறது. இது போன்ற மோசமான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், கடும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் எச்சரித்துள்ளார்.