மலையாள சினிமா உலகில் நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு அமைத்த ஹேமா கமிட்டி ஆய்வுகள், விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த நிலையில், அதில் பல நடிகைகள், துணை நடிகைகள் தாங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமா கமிட்டி அறிக்கை அடிப்படையில் கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள், தவறாக நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பார்வதி திருவொத்து, ஊர்வசி உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து நடிகர் சித்திக் மீதே பாலியல் புகார் எழுந்துள்ளது. ஒரு நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குரல்கள் ஒலித்து வரும், நிலையில் சித்திக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த சம்பவம் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K