தமிழக மக்களுக்கு ஆதரவளித்த அமிதாப் பச்சனுக்கு நன்றி கூறிய கமல்!
, புதன், 5 டிசம்பர் 2018 (17:34 IST)
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கடந்த மாதம் 14 மற்றும் 15ம் தேதிகளில் 'கஜா புயல்' தாக்கியது. இதனால் தமிழக டெல்டா மாவட்டங்களும் புதுச்சேரி மாநிலமும் வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் லட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். 5 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் புயலில் வேறோடு சாய்ந்தன.
இந்நிலையில் தற்போது இது குறித்து இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன் வெளியிட்டுள்ள வீடியோவில், "நவம்பர் 15-ம் தேதி கஜா புயல் தமிழகத்தின் கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களை வெகுவாக பாதித்தது. இதனால் மிகப்பெரும் விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும் ஏறக்குறைய 3.7 லட்சம் மக்கள் வீடுகளை இழந்திருக்கிறார்கள்.
60-80 சதவீத தென்னை மரங்கள் புயலுக்கு இரையாகியுள்ளன. இந்தியாவில் தேங்காய் உற்பத்திக்கான மிகப்பெரும் பங்கு அவர்களிடம் தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் மத்திய அரசுகள் அந்த மக்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்கள்.
ஆனால் தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும், மற்ற மாநில மக்களும் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவிட முன் வர வேண்டும். இந்த நேரத்தில் நம் நாட்டின் ஒற்றுமையை பிரதிபலிப்பது அவசியம்" என அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அமிதாப் பச்சனின் இந்த கருத்துக்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்