ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டது தொடர்பாக நடிகர் அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை கேலி செய்துள்ளார்.
ஜி.எஸ்.டி வரி விதிப்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் இடையூறுகளை கண்டறிந்து அகற்றுமாறு ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அறிவுறுத்தி உள்ளேன் என மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். அதைத்தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் சிறு, குறு தொழில் துறையினர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறு, குறு வியாபாரிகளுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி. வரியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதை நடிகர் அரவிந்த்சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இதற்காகத்தான் காத்திருந்தேன என குறிப்பிட்டு மத்திய அரசை கேலி செய்துள்ளார்.
அவர் தொடர்ந்து இதுதொடர்பாக கிண்டலாக நான்கு பதிவுகள் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-
இதற்காகத்தான் காத்துக்கொண்டிருந்தேன் யாராவது முழு விவரங்களைப் படித்தீர்களா? இது முறுக்கு மற்றும் காராசேவைக்கும் பொருந்துமா? தொலைக்காட்சி விவாதங்கலைப் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
நான் விரும்புவது 1 இந்தியா, 1 வரி, மாநிலங்கள் தனியாக கூடுதல் வரிகள் விதிக்கக்கூடாது. சினிமா டிக்கெட்டுகளுக்கு இரட்டை வரி. இடைவேளையில் வாங்கி சாப்பிடும் பிராண்ட் இல்லாத பொருட்களுக்கு வரி குறைப்பு.
ஆரோக்கியமற்ற உணவு பொருட்களால் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவரிடம் சென்றால் 12% ஜி.எஸ்.டி என்கிறார். இவ்வாறு அரவிந்த்சாமி கிண்டலாக டுவீட் செய்துள்ளார்.