தமிழ் சினிமாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்து வருபவர் லோகேஷ் கனகராஜ்.
விக்ரம் ஹிட்டுக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் மீண்டும் விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களும் ஆவலாக உள்ளனர். ஏற்கனவே பிரபாஸ், கமல், கார்த்தி ஆகிய நடிகர்களின் படங்களை இயக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை சந்தித்து அவர் படத்தை இயக்கவும் பேச்சுவார்த்தை செய்வதாக சொல்லப்படுகிறது. இப்படி பிஸியாக முன்னணி நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் இயக்குனராக லோகேஷ் வலம் வந்துகொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாரதிராஜா லோகேஷ் பற்றி பேசும் போது “நான்கே படங்களில் இன்று சாதித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். எனக்கு அவரோடு போட்டி போட்டு படம் இயக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. லோகேஷ் என் படத்தை பாராட்ட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட லோகேஷ் பாரதிராஜாவின் “சிவப்பு ரோஜாக்கள்” மற்றும் டிக் டிக் டிக் ஆகிய படங்கள் மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.