வைரமுத்து தங்களிடம் தவறாக நடந்து கொண்டார் என்று கூற பல பாடகிகள் பயப்படுகிறார்கள் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி பிரபல யூடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் மீது பாலியல் புகார் கூறினார். தனக்கு ஆதரவளிப்பதாக கூறி தன்னிடம் தவறான வார்த்தைகளை அவர் பயன்படுத்தினார் எனக்கூறி பிள்ளையார் சுழியை போட்டார். அதற்கு ஆதரமாக வாட்ஸ்-அப் உரையாடல்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
13 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பாடல் நிகழ்ச்சிக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்த போது, கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அவரது தாயாரும் அதை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு வைரமுத்து மற்றும் சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சுரேஷ் இருவரும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் வீடியோ நேரலை செய்த சின்மயி “ இங்கே எல்லா பெண்களும் பாலியல் தொல்லைகளை சந்திக்கிறார்கள். உங்கள் வீட்டு பெண்களை கேட்டுப் பாருங்கள். பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவு குறித்து கூறினால் காது கொடுத்து கேளுங்கள். ஆதாரம் கேட்டால் பெண்களால் எப்படி கொடுக்க முடியும். வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து இப்போதும் உறுதியாக இருக்கிறேன். அவரால் பல பாடகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், வெளியே கூற பயப்படுகின்றனர்.
வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை.. என் திருமணத்திற்கு அவரை அழைத்தேன். இல்லையெனில், ஏன் அழைக்கவில்லை என்கிற கேள்வி எழுந்திருக்கும். அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க அப்போது எனக்கு தைரியம் இல்லை” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.