ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் மூலம் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாடும் விதமாக மும்பையில் நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படம் இந்தியாவின் கான் பனேகாஅ க்ரோர்பதி நிகழ்ச்சியை ஒட்டி மும்பை தாராவியில் வாழ் மக்களின் கதையைப் பேசியப் படம். இந்தப் படம் 11 ஆஸ்கர் விருதுகளை வென்றது. அதில் சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த பாடல் ஆகியப் பிரிவுகளின் கீழ் ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்றார். ஆஸ்கர் வென்ற மேடையில் ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ எனத் தமிழில் கூறி தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்தினார்.
அதையடுத்து உலகம் முழுவதும் பிரபலம் அடைந்த அவர் பல ஹாலிவுட் படங்களிலும் வெளிநாட்டுப் படங்களிலும் இசையமைப்பாளராகப் பணியாற்றினார். இந்நிலையில் ஆஸ்கர் வென்று பத்து ஆண்டுகள் நிறைவண்டைந்துள்ளதை அடுத்து படத்தின் கதை நடக்கும் இடமான மும்பைத் தாராவியில் ஏ.ஆர்.ரஹ்மான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங், மஹாலக்ஷ்மி ஐயர், விஜய் பிரகாஷ், நடிகர் அனில் கபூர் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஹ்மானின் மகள் கதிஜா ரஹ்மான் ‘ கடந்த 10 வருடங்களில் நீங்கள் எங்களுடன் செலவிடும் நேரம் குறைந்துள்ளதே தவிர உங்களிடம் வேறு எந்த மாற்றமும் இல்லை. ஆஸ்கர் விருது உங்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் எங்களுக்குத் தெரியாமல் நிறைய சமூக சேவை செய்கிறீர்கள். இது என் உங்களிடம் நான் அதிகம் போற்றும் ஒரு குணம்’ என உணர்ச்சிப் பூர்வமாகக் கூறினார்.