‘நிமிர்’ படத்தை இயக்கியுள்ள பிரியதர்ஷன், பாரதிராஜாவுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம் ‘நிமிர்’. கடந்த வாரம் ரிலீஸான இந்தப் படம், மலையாளத்தில் வெளியான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ படத்தின் தமிழ் ரீமேக்.
‘நிமிர்’ படத்தில் பார்வதி நாயர், நமீத பிரமோத் என இரண்டு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இயக்குநர் மகேந்திரன், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். புகைப்படக் கலைஞர்களாக மகேந்திரன், உதயநிதி ஸ்டாலின் இருவரும் இந்தப் படத்தில் நடித்துள்ளதால், புகைப்படக் கலைஞர்களுக்கான பிரத்யேக காட்சி திரையிடப்பட்டது.
அந்தக் காட்சியில் பேசிய பிரியதர்ஷன், “ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் அவர்கள்தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால்தான் எனக்கு புகைப்படக் கலைஞர்கள் மீதும், ஒளிப்பதிவாளர்கள் மீதும் எனது மரியாதை மேலும் கூடியது. 'நிமிர்' படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தருணத்தில், மண் வாசனையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய இயக்குனர் பாரதிராஜாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.