நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஜுவல்லரி நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடித்ததற்காக அடுத்த மாதம் ஐந்தாம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு பிரகாஷ்ராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த ஜுவல்லரி ஒன்று நகை சீட்டு கட்டிய மக்களின் பணத்தை சுமார் 100 கோடி அளவில் மோசடி செய்து விட்டதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து அந்த ஜுவல்லரியின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டது. தற்போது இந்த நகை கடையின் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த ஜுவல்லரிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் பொதுமக்கள் பணத்தை மோசடி செய்திருப்பதும் அந்த பணத்தில் போலி நிறுவனங்களில் முதலீடு செய்து கணக்கு காட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் பண மோசடி வழக்கில் சிக்கிய நகை நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்ததால் பிரகாஷ் ராஜ் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.