தமிழில் அதிகம் நடித்தால், மலையாளத்தில் உள்ள இடம் பறிபோய்விடுமோ என்று பயப்படுகிறார் துல்கர் சல்மான்.
பாலாஜி மோகன் இயக்கிய ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் துல்கர் சல்மான். அந்தப் படம் சரியாகப் போகவில்லை. அதன்பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த ‘ஓ காதல் கண்மணி’ எல்லோருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அதன்பிறகு எந்த தமிழ்ப் படத்திலும் உடனே கமிட்டாகவில்லை துல்கர்.
காரணம், அவரைத் தேடிவந்த எல்லாக் கதைகளுமே காதல் கதைகளாக இருந்ததாம். ‘ஒரே மாதிரியான படங்களில் நடித்து, தன்னுடைய ரசிகர்களைப் போரடிக்க விரும்பவில்லை’ என்கிறார் துல்கர். தமிழில் நல்ல கதைகள் வந்தால் மட்டுமே நடிக்கத் தயாராக இருப்பவர், மலையாளத்தில்தான் அதிக கவனம் செலுத்துகிறார். ஏனென்றால், தமிழில் கவனம் செலுத்தினால், மலையாளத்தில் கிடைத்திருக்கும் இடம் பறிபோய்விடுமோ என பயப்படுகிறார்.