திரௌபதி இயக்குனர் மோகன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டுவதாக கலாட்டா இணையச் சேனலின் தொகுப்பாளர் விக்ரமன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத நடிகர் நடிகைகள் மற்றும் இதுவரை வெளியே தெரியாத இயக்குனர் என குறைந்த பட்ஜெட்டில் உருவான திரௌபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 330 திரைகளில் வெளியான இந்த படம் இதுவரை 14 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வருடம் வெளியானப் படங்களில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது திரௌபதி திரைப்படம்தான் எனக் கோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் மோகன் கலாட்டா என்ற இணையச் சேனலுக்கு அளித்த பேட்டியின் போது பாதியிலேயே எழுந்து சென்றது பரபரப்பை உருவாக்கியது. இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாக தொகுப்பாளர் விக்ரமனுக்கும் பாராட்டுகள் கிடைத்தன.
இதையடுத்த நாட்களில் விக்ரமனின் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு அவருக்கு ஆபாச வசைகளும், மிரட்டல்களும் விடுக்கப்பட்டதாக கூறினார். இதையடுத்து தற்போது காவல் ஆணையர் அலுவலகத்தில் இயக்குனர் மோகன் மீது புகார் அளித்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மோகனின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுக்கின்றனர். மேலும் என் சாதி குறித்து கேள்வி எழுப்பி என்னை ஒரு அமைப்பின் பிரதிநிதியாக்க பார்க்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.