கைதி படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தன மூலம் ரசிகர்கள் மனதில் அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. அவர் கதாநாயகனாக நடித்த, வசந்தபாலன் இயக்கிய அநீதி படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அதே போல சாந்தகுமார் இயக்கத்தில் அவர் நடித்த ரசவாதி திரைப்படமும் ஒரு தோல்விப் படமாகவே அமைந்தது.
இந்நிலையில் தமிழை தாண்டியும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் அர்ஜுன் தாஸ் நடிப்பில் சமீபத்தில் பாம் திரைப்படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகப் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தன்னுடைய நண்பரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார்.
அதில் “லோகேஷ் அழைத்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பேன். அவரிடம் கதை கூட கேட்கமாட்டேன். எனக்கு அடையாளம் தந்தவரே அவர்தான். அவர் சொல்லும் கதாபாத்திரத்தில் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன்” எனப் பேசியுள்ளார்.