கடந்த பல ஆண்டுகளாக அஜித்குமார் ஊடகங்களை சந்திப்பதையும் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்து வந்தார். இதற்கு அவருக்கு ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள்தான் காரணம் என சொல்லப்பட்டது. ஆனால் அஜித் அதிசயமாக தற்போது பொது வெளிகளுக்கு அதிகம் வருகிறார். அடிக்கடி ஊடகங்களை சந்திக்கிறார்.
இந்த மாற்றங்கள் எல்லாமே அவர் மீண்டும் கார் பந்தயங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்த பின்னர் நடக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தற்போது தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் எனும் ஊடகத்துக்கு காணொளி நேர்காணல் அளித்துள்ளார். அதில் பல சம்பவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டுள்ளார்.
ஆனாலும் இந்த நேர்காணல் சில லட்சம் பேர்களை மட்டுமே எட்டியுள்ளது. அதற்குக் காரணம் இந்த நேர்காணல் ஆங்கிலத்தில் இருப்பதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் சினிமாப் பத்திரிக்கையாளரான ஜெ பிஸ்மி இது குறித்துப் பேசும்போது “அஜித்தின் இன்றைய வளர்ச்சிக்கு முக்கியக் காரணமே தமிழ் ஊடகங்கள்தான். ஆனால் அவர் பல ஆண்டுகளுக்குப் பிறகு நேர்காணல் அளிக்கும்போது ஒரு ஆங்கில ஊடகத்துக்கு அளிக்கிறார். அப்படியென்றால் அவர் தமிழ் ஊடகங்களைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார். இது அவர் செய்யும் அவமரியாதை இல்லையா? அந்த நேர்காணலைப் பார்த்ததும் எனக்குக் கோபம்தான் வந்தது” எனக் கொந்தளித்துள்ளார்.