பொம்மலாட்டம் படம் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமான காஜல் அகர்வாலுக்கு ராஜமௌலியின் மகதீரா திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து வந்தார்.
கொரொனா லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று திடீரென சமூகவலைதளங்களில் காஜல் அகர்வால் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்து விட்டதாக வதந்தி ஒன்று பரவியது. இதற்கு காஜலே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் “சில அடிப்படை உண்மையற்ற தகவல்கள் என்னைப் பற்றி பரவுவதை அறிய நேர்ந்தது. நான் விபத்தில் இறந்தவிட்டதாக.. அது முழுக்க முழுக்க பொய். கடவுளின் அருளால் நான் நலமாக உள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். ” என இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.