பாடலாசிரியர் வைரமுத்து மீது வளர்ந்து வரும் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, தான் எழுதிய பாடல் வரிகளை வைரமுத்து தன் பெயரில் வெளியிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கார்த்திக் நேத்தா சென்ற ஆண்டு வெளியான 96 படத்திற்குப் பாடல்கள் எழுதியதன் மூலம் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார். அந்த படத்தின் எல்லாப் பாடல்களும் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.
ஆனால் இந்த புகழ், வாய்ப்புகளெல்லாம் அவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டும். சற்குனம் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா படத்தில் போறானே போறானே என்ற பாடலை அவர் எழுதியிருந்தார். ஆனால் அந்தப் படத்தில் அந்த ஒருப் பாடலை மட்டும் அவர் எழுதவில்லையாம். படத்தின் சூப்பர் ஹிட் பாடலான ’சரசர சாரக்காத்து வீசும்போது’ என்ற பாடலையும் அவர்தான் எழுதியிருக்கிறார். ஆனால் அந்த பாடலின் சில வரிகளை மாற்றிப் போட்டு தான் எழுதியது போல வைரமுத்து உபயோகப்படுத்திக் கொண்டாராம்.
இதனைப் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா தனது சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் வைரமுத்து தான் மிகவும் மதிக்கும் கலைஞர் என்றும் ஆனால் இதைப் போல பல பாடலாசிரியர்களின் பாடல்களை தனது பெயரில் அவர் போட்டுக்கொள்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். வைரமுத்துவுக்கு அவரது மனைவிதான் பாடல் எழுதித் தருவதாக பல ஆண்டுகளாக ஒருக் குற்றச்சாட்டும் கோலிவுட்டில் உலாவி வருகிறது.
வைரமுத்து இப்போதுதான் சின்மயி கூறிய மி டூ பிரச்சனையில் இருந்து மீண்டு வந்து பாடல்களை எழுத ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கார்த்திக் நேத்தாவின் மற்றொரு மி டூ புகார் வைரமுத்து மீது வைக்க்ப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு குறித்து வைரமுத்துவிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.
சாரக்காத்துப் பாடலுக்காக 2011 ஆம் ஆண்டின் ஃபில்ம்ஃபேர் விருது மற்றும் விஜய் அவார்ட்ஸ் ஆகிய விருதுகளை வென்ற வைரமுத்து மேடைகளில் அந்தப் பாடலை தான் எவ்வாறு எழுதினேன் என நீண்ட விளக்கங்களும் அளித்தார்.