Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

”நான் படைப்பதனால் என் பெயர் இறைவன்..” - கவிஞர் கண்ணதாசன் ஒரு சகாப்தம்

Kannadasan
, செவ்வாய், 17 அக்டோபர் 2023 (10:13 IST)
இந்தியாவின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் கண்ணதாசன்.


 
1969-ம் ஆண்டில், 'குழந்தைக்காக' என்ற படத்துக்காக இவர் எழுதிய 'ராமன் என்பது கங்கை நதி' என்ற பாடலுக்காக, இந்த விருது கிடைத்தது. 1979-ல் 'சேரமான் காதலி' என்ற நாவலுக்காக, 'சாகித்ய அகாடமி' பரிசு பெற்றார். இவருடைய கவிதைகள் இந்தி உள்பட பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு முதலான அயல்நாட்டு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன

1981-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற தமிழ்ச்சங்க விழாவிலும், கவிஞர்கள் மாநாட்டிலும் கலந்து கொள்வதற்காக கண்ணதாசன் சென்றிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

சிகாகோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் ஜுலை 24 -ந்தேதி அனுமதிக்கப்பட்டார். முதலில் அபாய கட்டத்தில் இருந்த அவர் டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் படிப்படியாக குணம் அடைந்து வந்தார். உணர்வு இழந்த நிலையில் இருந்து மீண்டு கண்விழித்து பார்த்தார்.உதடுகள் மட்டும் அசைந்தன. பேச முடியவில்லை. என்றாலும் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொண்டார்.

webdunia

 
பூரணமாக குணம் அடைய 3-மாதம் ஆகும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் அக்டோபர் மாதம் கண்ணதாசன் உடல் நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டது. அவருடைய சிறுநீரகம்(கிட்னி) சரிவர இயங்கவில்லை. அவருக்கு காய்ச்சலும் ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் கண்ணதாசன் 17-10-1981அன்று இந்திய நேரப்படி இரவு 10-45 மணிக்கு (அமெரிக்காவில் பகல் 12 மணி) மரணம் அடைந்தார். கண்ணதாசனுக்கு அப்போது வயது 54. கண்ணதாசனின் உடலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர முதல்-அமைச்சர் எம். ஜி.ஆர்.ஏற்பாடு செய்தார்.தமிழக அரசின் அரசவை கவிஞராக இருந்ததால், கண்ணதாசனின் சிகிச்சைக்கான செலவுகள் முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

கண்ணதாசனின் 2-வது மனைவி பார்வதி,மூன்றாவது மனைவி வள்ளியம்மை,மகன் கலைவாணன் ஆகியோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தார்கள்.இதனால் கண்ணதாசன் உயிர் பிரியும்போது அவர்கள் கண்ணதாசன் அருகில் இருந்தார்கள். சென்னை தியாகராயநகரில் கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது.

முதல் மனைவி பொன்னம்மாளும், மற்ற உறவினர்களும் படத்தின் அருகில் அமர்ந்து,கண்ணீர் விட்டுக்கதறி அழுதவண்ணம் இருந்தனர். கண்ணதாசன் மறைந்த செய்தி கேட்டதும் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவர்கள்,திரை உலகத்தினர் துயரம் அடைந்தனர்.

எம்.ஜி.ஆர். வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”'மற்றவர்கள் கவிதை எழுதினார்கள். கவியரசு கவிதையாகவே வாழ்ந்தார்.கவிஞர் என்றால் அது கண்ணதாசன் ஒருவரையே குறிக்கும் என்ற அளவுக்கு அவருக்கு புகழ் சேர்ந்தது.நூறு கவிஞர்கள் சேர்ந்து செய்யவேண்டிய இலக்கியப் பணியை கண்ணதாசன் ஒருவரே செய்தார். எப்போதாவது ஒருமுறை தோன்றுகின்ற இதிகாசக் கவிஞர் அவர்.' என்று எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

webdunia

 
தி.மு.க. தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் வீட்டிற்கு சென்று கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாளுக்கும்,மகன்களுக்கும் ஆறுதல் கூறினார். திரை உலகப் பிரமுகர்களும் சென்று ஆறுதல் சொன்னார்கள். அமெரிக்காவில் மரணம் அடைந்த கண்ணதாசனின் உடல் விமானம் மூலம் 21-10-1981அன்று காலை சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று கண்ணதாசன் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டி மீது முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள், அனைத்துக்கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் தியாகராயநகரில் உள்ள கண்ணதாசன் வீட்டிற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு வைக்கப்பட்டது. அங்கும் வந்த எம்.ஜி.ஆர், தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் பல தலைவர்கள், பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பிறகு கண்ணதாசன் உடல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு கொண்டு போகப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. உடல் மீது அவர் எழுதிய 'ஏசு காவியம்' என்ற புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது.அன்றய நடிகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிவாஜிகணேசன் மற்றும் திரை உலக பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கை அமைச்சர் ராஜதுரை வந்திருந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மறுநாள்(22-ந்தேதி) கண்ணதாசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கண்ணம்மாபேட்டை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. `சிதை'க்கு மூத்த மனைவியின் மகன் கண்மணிசுப்பு தீ மூட்டினார். முன்னதாக சர்வமதங்கள் சார்பில் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த சென்னை தியாகராய நகரில், சிலை அமைக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில், மணிமண்டபம் அமைக்கப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடசென்னை திரைப்படம் ஹவுஸ்புல்லா? பச்சை பொய் சொன்ன பத்திரிகையாளர்..!