கொரோனா பேரிடர் காலத்துக்குப் பின் மீண்டும் சினிமா துறை பழைய நிலைக்கு திரும்ப பெரிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த படப்பிடிப்பில் கார்த்தி மற்றும் ஜெயம்ரவி சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்புக்கான திட்டங்களை வகுத்த போது கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திரைப்படங்கள் மற்றும் பொழுதுபோக்குகளின் எதிர்காலம் - என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடலில் கலந்துகொண்டார். அப்போது ‘இனி குறைந்த பட்ஜெட்டில் இனி அதிக படங்கள் உருவாகும். இதற்காக பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு தமிழ்திரையுலகிற்கு தேவை. இப்போதைக்கு தியேட்டர் வெளியீடு சாத்தியம் இல்லை என்பதால் படங்களின் பட்ஜெட் குறைக்கப்படவேண்டும். குறிப்பாக பெரிய நட்சத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் தற்போதுள்ள சூழலை புரிந்துகொண்டு தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொண்டால், திரையுலகம் இக்கட்டான சூழலில் இருந்து வெளிவரும்’ எனக் கூறியுள்ளார்.