இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தை தமிழ் திரைத்துறையினர் கொண்டாடி வருகின்றனர்.
மதயானைக்கூட்டம் படத்தில் நடித்த கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயரித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை இப்படம் யதார்த்தமாக படம் பிடித்துள்ளது என சமூக வலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், திரைத்துறையினரும் இப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி வருகின்றனர்.
கடந்த 10 வருடங்களில் இது சிறந்த படம் என இயக்குனர் ராம் கூறியுள்ளார். அதேபோல், வாழ்வியலை அழகாக படம்பிடித்துக்காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். இப்படம் அடித்தட்டு மக்களின் தேவைகளை பேசுகிறது என மூடர் கூடம் நவீன் கூறியுள்ளார்.
இப்படம் பற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் சித்தார்த் “ பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவின் சுடர்விடும் புதிய பயணத்தை தொடங்கி வைத்திருக்கிறது. மாரி செல்வராஜின் இயக்கம் சிறப்பு. நிஜத்தை பேசும் அரிதான திரைப்படம். இப்படம் என்னை மிகவும் பாதித்தது. படம் முடிந்த பல மணிநேரமாகியும் இப்படம் என்னுடன் பயணித்தது.
கதிரின் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு அருமை. இதுபோன்ற உணர்ச்சியை ஏற்படுத்தும் படத்தை பல வருடங்களுக்கு பின் பார்க்கிறேன். மாரி செல்வராஜும், அவரது டீமும் பாராட்டப்படுவார்கள்” என உணர்ச்சிகரமாக பாராட்டியுள்ளார்.
அதேபோல், இயக்குனர் லெனின் பாரதி, விக்னேஷ் சிவன், புஷ்கர்- காயத்ரி, பி.எஸ். மித்ரன் உள்ளிட பல திரை பிரலங்கள் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.