மலையாள சினிமாவின் பிரபல நடிகர் நிவின்பாலி உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
'குழந்தை பருவத்திலிருந்தே நான் "ஒரே நாடு ஒரே கொள்கை" என்பதில் பற்றுக்கொண்டவன். கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவில் தான் நான் பிறந்து, வளர்ந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியாவின் ஒரு பகுதியாக கேரளா உள்ளதை நினைத்து என்றும் பெருமைக்கொண்டிருப்பேன் என்பதில் ஜயமில்லை.
ஆனால் இவ்வளவு அழகிய கேரளா இன்று வெள்ளதாலும், நிலச்சரிவாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மக்கள் தங்களது உடமைகளையும், வீடுகளையும் இழந்து அடிப்படை வசிதி இன்றியும், உணவு இன்றியும் தவித்துவருகின்றனர். என் மாநில மக்களின் நிலைமை என் மனதை பிசைக்கிறது.
இந்நேரத்தில் எனக்கு நம்பிக்கை அளிப்பது நம் தேசத்தின் ஒற்றுமை தான். வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கையுள்ள என் நாட்டின் மக்கள் என் மாநிலத்தையும், எம்மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறேன். இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து மீண்டுடெழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை.
ஆனால் தற்போது உடனடி தேவைகள் அவசியம் என்பதால் இந்தக் கோரிக்கையை முன் வைக்கிறேன். உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களை உடனடியாக கேரள மக்களுக்கு அனுப்புங்கள். யார் மூலமாக அனுப்புகிறீர்கள் என்பது முக்கியமல்ல, உடனடியாக வந்து சேர வேண்டும் என்பது தான் ஒரே நோக்கம்.
"கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டுக் கொடுக்கும் "என்கிற நம்பிக்கையில் தான் நான் இருக்கிறேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்” என்று உருக்கமாக கூறியுள்ளார்.