கேரளாவில் மழை வெள்ளத்தால், நிவாரண முகாமில் தங்கி இருந்த பெண்ணிற்கு கோவிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.
கேரளா மாநிலம் மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய அழிவை அங்கே ஏற்படுத்தியுள்ளது இவ்வெள்ளம். பல நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரள மக்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
நிச்சயக்கிக்கப்பட்ட பல திருமணங்கள் கன மழையால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அஞ்சு (24) என்ற இளம்பெண்ணின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியதால், நிவாரண முகாமில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார். அஞ்சுவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்த வேளையில், இந்த பேரழிவு ஏற்பட்டதால் இருவீட்டாரும் திருமணத்தை தள்ளி வைக்க முடிவு செய்தனர்.
ஆனால் அஞ்சுவுடன் நிவாரண முகாமில் தங்கியிருந்த பலர் திருமணத்தை ஏன் தள்ளிவைக்கிறீர்கள், நடத்துங்கள் என கூறினார்கள். அஞ்சு குடும்பத்தார் இதுபற்றி மணமகன் வீட்டாரிடம் தெரிவித்தனர். அவர்களும் தற்பொழுதே திருமணம் நடத்திவிடலாம் எனக் கூறி, மணமகன் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்துசேர்ந்தார்.
பின் அருகிலிருந்த கோவிலில் அவர்களது திருமணம் எளிய முறையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி சோகத்தில் இருந்தவர்கள் மத்தியில் சிறிது உற்சாகத்தை ஏற்படுத்தியது.