இயக்குனர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியானது.
இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இரவின் நிழல் படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார் . கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகிய ஈரானிய திரைப்படமான Fish and Cat' என்ற திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்றும் இதை உலக சினிமா பத்திரிகைகள் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பலரும் அந்த திரைப்படம் ஒரு நான் லீனியர் திரைப்படம் அல்ல என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் பார்த்திபன் – ப்ளு சட்ட மாறன் ஆகிய இரு தரப்பினரும் மாறி மாறி விமர்சனங்கள் வைத்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்னர் பார்த்திபனின் ரசிகர்கள் சிலர் மாறனின் கொடும்பாவி உருவத்தை எரித்து எதிர்ப்பை தெரிவித்தனர். இது சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இப்போது அந்த விஷயம் சம்மந்தமாக பார்த்திபன் பேசியுள்ளார். அதில் “நான் ஊரில் இல்லாத போது இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் என் ரசிகர்கள் இல்லை. இப்படி ரசிகர்கள் இருந்தால் நான் கமர்ஷியல் திரைப்படங்களை எடுத்திருப்பேன். கொடும்பாவி எரிப்பில் எனக்கு எப்போதுமே நம்பிக்கை இல்லை. அதை பார்த்த மாறனின் குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பார்கள். அவர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.