பயணிகள் கவனிக்கவும் திரைப்படத்தை நடிகர் சூரி பாராட்டிப் பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பெருமளவுக் காப்பாற்றியது ஓடிடி நிறுவனங்கள்தான். இப்போது ஓடிடி உரிமை படத்தின் வியாபாரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தியாவில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் போன்ற உலகளாவிய ஓடிடி நிறுவனங்கள் பெரும் மார்க்கெட்டை வைத்திருந்தாலும், சோனி லிவ், ஜி 5 போன்ற இந்திய அளவிலான ஓடிடி நிறுவனங்களும் குறிப்பிடத்தக்க அளவு வாடிக்கையாளர்களை வைத்திருக்கின்றனர்.
ஏற்கனவே இந்த தளத்தில் மன்மதலீலை, ரைட்டர், செல்பி உள்ளிட்ட படங்கள் வெளியாகியுள்ள அடுத்து நேரடி ஓடிடி வெளியீடாக பயணிகள் கவனிக்கவும் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விதார்த் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்த படம் பற்றி பேசியுள்ள நடிகர் சூரி “பயணிகள் கவனிக்கவும் படத்தை மக்கள் அனைவரும் கவனிக்க வேண்டும். மிகவும் அற்புதமான படம். நல்ல படத்தை பார்த்த சந்தோசம் மனதில் இருக்கிறது. மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படத்தை தமிழில் என்னுடைய நண்பர் சக்திவேல் இயக்கியிருக்கிறார். இன்றைய சூழலில் சமூக வலைதளங்களை எந்த அளவிற்கு பயன்படுத்தவேண்டும் என்பதை தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். ஒரு போட்டோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... ஒரு வீடியோவை பதிவிடுவதாக இருந்தாலும் சரி... அல்லது அதுகுறித்து கருத்துக்கள் தெரிவித்தாலும் சரி.. அதை எவ்வளவு கவனத்துடன் கையாள வேண்டும் என்பதையும், தவறாக பதிவிட்டால் எத்தனை பேருடைய வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக்காட்ட இந்த ஒரு படம் போதும்.” எனக் கூறியுள்ளார்.