தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் ராதாரவி. வில்லன், குணச்சித்திரம் நகைச்சுவை என அனைத்து விதமானக் கதபாத்திரங்களிலும் சிறப்பாக நடிக்கும் திறன் கொண்டவர் ராதாரவி. சமீபகாலமாகத் திரைப்படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் தாவூத் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் “இந்த படத்தில் நான் இரண்டு நாட்கள்தான் நடித்தேன். படத்தில் பேய் இருக்கிறதா, ரத்தம் இருக்கிறதா எனக் கேட்டேன். எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஒரு படம் வெற்றியடைய இதெல்லாம் தேவையாக உள்ளது.
ரஜினியே வெட்டுக் குத்து உள்ள கதைகளை நம்ப ஆரம்பித்து விட்டார். ரத்தம் தெறிக்க வன்முறைக் காட்சிகளில் நடிக்கிறார். நம்மைச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. படத்தில் நாம் கொஞ்சம் சுயநலமாகதான் இருக்கவேண்டும்.” எனப் பேசியுள்ளார். சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான கூலி படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருக்க A சான்றிதழ் பெற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.