இயக்குனர் விக்ரமன் பட்டறையில் இருந்து வந்து நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற படங்களை இயக்கி பிரபலமானவர் ராஜகுமாரன். பின்னர் தேவயானியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் அவர் இயக்கிய படங்கள் பெரியளவில் வெற்றி பெறவில்லை.
இதையடுத்து அவர் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரின் மோசமான நடிப்புக் காரணமாக இணையத்தில் கேலிக்கு ஆளானார். இந்நிலையில் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் படத்தில் காமெடி காட்சி ஒன்றில் ராஜகுமாரனை நடிக்கவைத்து தன் ஸ்டைலில் செம்ம கலாய் கலாய்த்திருந்தார். அந்த காட்சிகள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. ஆனால் அதன் பின்னர் நடிகராகவும் அவருக்குப் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை.
இந்நிலையில் சமீபகாலமாக யுடியூபில் நேர்காணல்கள் என்ற பெயரில் தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருக்கும் கலைஞர்களை அவமதிக்கும் விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார். ஏற்கனவே விக்ரம், கமல் ஆகியவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய அவர் தற்போது இயக்குனர் மகேந்திரன் குறித்து இழிவாகப் பேசியுள்ளார். அதில் “ஒன்னு ரெண்டு படங்களை எடுத்த மகேந்திரனைத் தல மேல தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். ஆனா ராம் நாராயணன் சார் 100 படங்கள் எடுத்துள்ளார். நான் மகேந்திரன் படங்கள் பார்த்ததில்லை. சமீபத்தில்தான் உதிரிப் பூக்கள் பார்த்தேன். அதுல ஒன்னும் பெருசா இல்ல. கிழக்கேப் போகும் ரயில் படத்துல ஒரு பிட் கதை வரும் மனைவியோட தங்கச்சிய அடைய ஆசப்படுவான் ஒருத்தன் அதையே ஒரு முழுப்படமா எடுத்திருப்பாரு. அதுக்கா ரெண்டர மணிநேரம்? எனப் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சினிமா ரசிகர்கள் மத்தியில் கோபத்தை உண்டாக்கியுள்ளது.