ஓடும் காரில் இருந்து குதித்து 'கிகி' நடனம் ஆடிய ரெஜினா மீது நடவடிக்கை எடுக்குமாறு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள்.
கனடாவின் பிரபல பாடகர் டிரேக் ஸ்கார்பியன் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்ற 'கிகி' பாடல் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலுக்கு அமெரிக்காவை சேர்ந்த ஷாகி என்ற காமெடி நடிகர் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
இதையடுத்து ஹாலிவுட் நடிகர் வில் சுமித் உள்பட உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ஓடும் காரில் இருந்து குதித்து நடனமாடி அந்த வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வைரலாகி வரும் இந்த 'கிகி' சவால் நடன விளையாட்டு, இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்தி நடிகைகள் அடா சர்மா, நோரா பதே, நியா சர்மா, கரிஷ்மா சர்மா உள்ளிட்டோர் காரில் இருந்து இறங்கி கிகி பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ரெஜினாவும் ஓடும் காரில் இருந்து குதித்து கிகி பாடலுக்கு ஆடிய வீடியோவை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
இந்த கிகி நடனத்தால் விபத்துக்கள் ஏற்பட்டு சிலர் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த மரண நடனத்தை ஆட வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மீறி ஆடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளனர். இந்த நிலையில் ரசிகர்களை கிகி நடனத்துக்கு தூண்டுவதுபோல் நடனமாடி வீடியோ வெளியிட்ட ரெஜினா மற்றும் இந்தி நடிகைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலர் கருத்து பதிவிட்டு வருகிறார்கள்.