தமிழ் சினிமாவின் இரு முக்கிய ஆளுமைகளான விஜயகாந்துக்கும் வடிவேலுவுக்கும் இடையே 10 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்தது.
தமிழ் சினிமாவின் கதாநாயகன் காமெடியன் ஹிட் காம்போவில் விஜயகாந்த் வடிவேலு காம்போவுக்கு தனியிடம் உண்டு. ஆனால் 2011 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே கருத்து மோதல் எழுந்தது. இதனால் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் வடிவேலு வீட்டின் முன் கல்வீசினர் என்று போலிஸில் புகார் எல்லாம் கொடுக்கப்பட்டது.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் இதன் காரணமாக வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனால் அத்தேர்தலில் தேமுதிக இடம்பெற்றிருந்த அதிமுக வெற்றி பெற்றதை அடுத்து வடிவேலுவுக்கு சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. இந்நிலையில் இப்போது 10 வருடங்களுக்குப் பிறகு வடிவேலு விஜய்காந்த் சந்திப்பு நடந்துள்ளதாகவும் இருவரும் மனம் விட்டு பேசியுள்ளதாகவும் இணையத்தில் செய்தி வெளியாகி வருகிறது.