ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் முதலில் சோதனை படப்பிடிப்பை நடத்த ராஜமௌலி திட்டமிட்டுள்ளார்.
இந்தியா முழுவதும் மார்ச் 19 ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. அதையடுத்து இரண்டு மாதங்களாக சினிமாவில் இருக்கும் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தற்போது தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
இதையடுத்து சினிமா படப்பிடிப்புக்கான அனுமதி எப்போது வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அண்டை மாநிலங்களான தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய இரு மாநிலங்களின் முதல்வர்களும் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளனர். முன்னதாக இது சம்மந்தமாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அம்மாநில முதல்வர்களை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டு இருக்கும் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி தனது படத்திற்கான ட்ரையல் ஷூட்டை செய்ய இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் சமூகவிலகல் உள்ளிட்டவற்றைக் கடைபிடிக்க முடியுமா என்பது குறித்து இந்த படப்பிடிப்பில் அவர் பரிசோதிக்க இருக்கிறார்.