ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிப்பது குறித்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், தொடர்ந்து படங்களில் நடித்தபடி அரசியலிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
படப்பிடிப்பு ஒன்றிற்காக குமரி சென்றவரை செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது ரம்மி விளம்பரத்தில் நடிப்பது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் “குடிப்பழக்கம் குடியை கெடுக்கும் என கூறிவிட்டு டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. சிகரெட் தீங்கானது என கூறிவிட்டு சிகரெட்டுக்கும் தடை விதிக்கவில்லை.
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடை செய்தால் அதில் நடிப்பதும் நிறுத்தப்படும். ஆன்லைன் ரம்மியை முற்றிலுமாக தடை செய்ய சட்டம் கொண்டு வரப்பட்டால் அதில் நடிப்பதை நிறுத்தி விடுவேன்” என கூறியுள்ளார்.
மேலும் ராஜராஜ சோழன் பொன்னியின் செல்வனில் இந்து அரசனாக காட்டப்பட்டுள்ளதாக உருவாகியுள்ள சர்ச்சை குறித்து அவரிடம் கேட்டபோது, இயக்குனரிடம் தான் அதை பற்றி கேட்க வேண்டும் என கூறினார்.
Edited By: Prasanth.K