இயக்குநர் ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்திருக்கும் படம் சர்கார் .இந்த கதை தன்னுடையது என்று கூறும் உதவி இயக்குநர் வருண் எனும் ராஜேந்திரன் என்பவர் கடந்த 2007 ஆம் ஆண்டு தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்தது உண்மைதான் என்பது தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்க தலைவர் மற்றும் மூத்த நடிகருமான திரு.கே.பாக்யராஜ் மற்றும் சங்கத்தில் உள்ள குழுவினரால் நேற்று மாலையில் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலையில் தென்னிந்திய எழுத்தாளார்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் செங்கோல் கதையும் கதையும் ஒன்றுதான்.ஆனால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது; என தலைவராக இருந்து கூட உதவி செய்ய முடியவில்லை என தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து வருண் இனி என்ன செய்யப்போகிறார் என அனைவரும் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இது ஒருபுறம் இருக்க... கத்தி படத்தின் ரீமேக் உரிமைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.
கத்தி படத்தின் கதை என்னுடையது என்றும் தனது கதையை படமாக எடுக்க முருகதாஸ் எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை என்று ரங்கதாஸ் புகார் தெரிவித்திருந்தார். . கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையும் விற்றுவிட்டதாக அவர் குற்றம் சாட்டி இருந்தார். இவரைப் போன்றே கோபி நாயர் என்ற இயக்குநரும் கத்தி படக்கதை தன்னுடையது என்று கூறி முதலில் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதை யாரும் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதிகாரத்தின் பிடியில் சிக்கிய உண்மையானது காலப்போக்கில் நிராயுதபாணியாக நிற்கும் என்பதை யாரும் அறியாமலில்லை. இந்த மாதிரியான படைப்புத் திருட்டுச் செய்திகளைக் காதில் கேட்டும் படித்தும் வந்த மக்கள் சலைத்துப்போய் ஒருகட்டத்தில் சினிமா என்றாலே இப்படித்தான் படைப்புத்திருட்டும் இருக்கும்! மக்கள் காதுகளில் பூச்சுற்ற சினிமாகாரர்கள் என்னவேண்டுமானாலும் செய்வார்கள் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர். அதனால் இந்த துறையில் நல்லபெயர் எடுத்த சிலருக்கும் சிறிது கலக்கம் வந்தது.
இந்த நிலையில் இந்த(கத்தி) வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் கத்தி ரீமேக் உரிமைகளை விற்க தற்காலிக தடை விதித்திருக்கிறார்.
ஆனால் முருகதாஸ் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் எதிர்மனு தாக்கல் செய்ததையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை வரும் 31 (அக்) தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
ஏற்கனவே சர்கார் திரைப்பட கதை வழக்கு வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த இரு வழக்கும் படைப்பாக்கம் சம்பந்தமான முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் அரசியல்வாதியைப்போல ஒரு தலைவனுக்கு முன்னுதாரனமான கதையை ஊருக்கு மட்டுமே சொல்லி இருக்கிறார் போலும்.ஆனால் தான் நடித்த படத்தின் கதையும் வருணின் கதையும் ஒன்றுதான் என்று அவருடைய சீனியர் நடிகர் பாக்யராஜ் அறிக்கை விடுத்துள்ள நிலையிலும் இதற்கு விளக்கம் கொடுத்து விஜய்,முருகதாஸ் மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் அறிக்கையோ எதுவும் வெளியிடவில்லை.
நான் முதல்வரானால் ...என்று அவர் கூறியதிலிருந்து விஜய்க்கு முதல்வராகும் ஆசை மனதில் நாற்றாங்கால் ஊன்றியுள்ளது என தமிழக மக்கள் திட்டவட்டமாக அறிந்துகொண்டனர்.
தன் சினிமா துறையை சார்ந்த ஒருவர் (வருண் )பாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரைக்கும் நீதிக்காக சென்றுள்ள நிலையில் தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவர் போல விஜய் நடந்து கொள்வதுதான் வேடிக்கையாக உள்ளது.
இத்தனைக்கும் எச்.ஏ.சந்திரசேகர் சில நாட்களுக்கு முன் விஜய் அரசியலுக்கு வந்தால் உங்களுக்கு ஏன் எரிகிறது? என பத்திரிக்கையாளர்களைப் பார்த்து கேள்வி கேட்டார்.
ஒரு பொறுப்புள்ள பதவிக்கு வர ஆசைப்படுவதில் யாரும் தவறென்று சொல்லப்போவதில்லை.
ஆனால் எந்த முடிவும் எடுப்பதற்கு முன் தன்னை முதலில் சுயபரிசோதனை செய்து கொண்டு அதன் பிறகு தான் சொன்ன சொல்லை வெல்ல இன்னொரு சொல் எதுவும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்த பிறகு வார்த்தைகளை தெரிவுசெய்து பேசுவதுதான் சமுதாயத்திற்கு நலம் பயக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
விஜய் படத்துக்கு மட்டும் ஏன் இந்த எதிர்ப்புகள் வருகிறது எனக் கேட்டால் ஒருவேளை உதவி இயக்குநர் வருண் போன்று பல படைப்புத் திருட்டால் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக எழுப்பப்பட்ட குரல்களாகக்கூட அதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைக்கு நாம் இப்போது உந்தப்பட்டுள்ளோம்.
நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் உள்ளுக்குள் விழித்திருக்கும் மனசாட்சி சொல்லும் தீர்ப்புக்கு இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்...?
படைப்புத் திருட்டு என்பது யாரோ ஒருவர் பெற்றெடுத்த குழந்தையை கடத்திவைத்துக்கொண்டு தனது குழந்தை என்று உரிமையுடன் சொந்தம் கொண்டாடுவதற்கு ஒப்பானதாகவே கருதப்படும்.
இனி இவர்கள் பொதுவாழ்விற்கு வந்தால் அப்போது எடுத்துரைப்பதிலும் கூட யாராவது சொந்தமாக சிந்தித்து வைத்ததை எடுத்து தனது அறிக்கை என உரிமை கொண்டாடுவார்களோ என்ற சந்தேகமும்,பயமும் நாலாபக்கமும் எகிறி அடிக்கிறது.
சினிமா போன்றே நிஜ வாழக்கையிலும் தாங்கள் என்ன சொன்னாலும் ரசிக்க ஆட்கள் உண்டு என எண்ணிவிடக்கூடாது.
ரசிகர்களும் மக்களில் ஒரு பங்கினர் என்பதையும் இவர்கள் மறந்து விடக்கூடாது.