தனது கணவர் ராஜ் குந்த்ராவிடமிருந்து ரூ. 15 கோடி பெற்றதாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளுக்கு எதிராக, நடிகை ஷில்பா ஷெட்டி சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் வழக்கறிஞர் பிரசாந்த் பாட்டீல், வெளியிட்ட அறிக்கையில், "இந்த தகவல் முற்றிலும் போலியானது மற்றும் உள்நோக்கம் கொண்டது. என் கட்சிக்காரரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இது பொதுவெளியில் திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது," என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ஆதாரமற்ற செய்திகளை பரப்பியவர்கள் மீது குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை தொடர ஷில்பா ஷெட்டி முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி மீது ரூ. 60 கோடி மோசடி வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரும் எப்போதும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருகின்றனர் என்றும், எதிர்காலத்திலும் அவ்வாறே செய்வார்கள் என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
வழக்கறிஞர் பாட்டீல் மேலும் கூறுகையில், "போலியான செய்திகளையும் சரிபார்க்கப்படாத உண்மைகளையும் வெளியிட்ட அனைத்து ஊடகங்களும் நீதிமன்றத்தில் தங்கள் செயல்களுக்கு பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்," என்று கடுமையாக எச்சரித்தார்.