பென்னி ஆசம்சா இயக்கியுள்ள எலிஅம்மச்சிடே ஆத்யதே கிறிஸ்துமஸ் மலையாள படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் மூலம் நடிகையாகியுள்ளார் திருவனந்தபுரம் சப் கலெக்டர் திவ்யா ஐயர் ஐஏஎஸ். அவர் ஒரு டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் உள்ள சிஎம்சியில்தான் மருத்துவம் படித்துள்ளார். இந்நிலையில் திவ்யா ஐயர் பேட்டி ஒன்றில் நான் கோட்டயத்தில் பணியாற்றியபோது இயக்குநர் என்னை அணுகி நடிக்குமாறு கேட்டார். முதியோர் இல்லம் பற்றிய படம் என்பதால் ஓகே சொல்லிவிட்டேன். இது கமர்ஷியல் படம் அல்ல. சமூகத்திற்கு கருத்து தெரிவிக்கும் படம். நான் ஐஏஎஸ் அதிகாரி என்பதால் முறையாக அரசிடம் அனுமதி வாங்கிய பின்புதான் படத்தில் நடித்தேன். ஐஏஎஸ் அதிகாரி படத்தில் நடிக்கக் கூடாது என்று சட்டம் இல்லை. நான் இப்படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ளேன்.
நான் மலையாளம் மற்றும் தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். சமீபத்தில் நான் பார்த்த தமிழ் படம் மெர்சல், விக்ரம் வேதா பார்த்தேன். ஆனால் அறம் படம் பார்க்கவில்லை. அது ரொம்ப நல்ல படம் என்று கேள்விப்பட்டேன். மெர்சல் படம் பிடித்திருந்தது. எந்த படமாக இருந்தாலும் சமூக கருத்தை கூறிவதாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று கூறியுள்ளார் திவ்யா ஐயர் ஐஏஎஸ்.
ஒரு கலெக்டர் நடிகையாக படம் நடிப்பது இதுவே முதல்முறையாகும். மக்களுக்கு நல்ல செய்திகள் சென்றடைய வேண்டும் என்னும் அவரின் கொள்கையை அனைவரையும் கவர்ந்துள்ளது. பாராட்டுகள்.