ஆர் ஆர் ஆர் படத்துக்கு பிறகு ராஜமௌலி இயக்கும் அடுத்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு நடிக்க உள்ளார். இந்த படம் புதையலைத் தேடி செல்லும் ஒரு சாகச திரைக்கதையாக அமைக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்க, கீரவாணி இசையமைக்கிறார். வால்ட் டிஸ்னி நிறுவனம் தயாரிக்கிறது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் காடுகளை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. ஒரிசாவில் ஷூட்டிங் நடந்த நிலையில் அடுத்த கட்டமாக வாரணாசி செட் அமைத்துக் காட்சிகளை எடுக்கவுள்ளார் ராஜமௌலி. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் பற்றி ராஜமௌலி அப்டேட் கொடுத்துள்ளார்.
அதில் “பிரியமுள்ள சினிமா ரசிகர்களே, நாங்கள் ஷூட்டிங் தொடங்கி சில காலம் ஆகிவிட்டது. அதே போல இந்த படத்தின் மீதான உங்களின் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது. இந்த படத்தின் கதையும், தளமும் மிகப்பெரியது. அதனால் இந்த படம் சம்மந்தமாகப் புகைப்படங்களோ பத்திரிக்கையாளர் சந்திப்போ போதுமானது இல்லை எனத் தோன்றுகிறது.
நாங்கள் படத்தின் சாரத்தைக் காட்டும் அளவுக்கு ஒன்றை ஷூட் செய்து வருகிறோம். அதை நவம்பர் மாதத்தில் வெளியிடவுள்ளோம். இதுவரை இதற்கு முன்பு வெளிவராத அளவுக்கு ஒன்றை நாங்கள் உருவாக்கி வருகிறோம். உங்கள் காத்திருப்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.