நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதாக கவுதம் மேனன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ''ஒரு எண்ணம், அதனாலான பல கனவுகள்! "துருவ நட்சத்திரம்" எழுத்துகளாக உருப்பெற துவங்கி ஒரு முழு திரைப்படமாக தன்னிலை அடையும் வரை அதற்கான சமரசமற்ற அர்ப்பணிப்பை இன்று வரையிலும் கொடுத்து வருகிறோம்.
சூழ்நிலைகள் அனைத்தும் நேரெதிராக அமைந்த போதிலும் எங்களின் முழு அர்ப்பணிப்பும் இந்த திரைப்படத்தை உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் விரைவில் வெளியிடும் நோக்கிலே இருக்கிறது.
நவம்பர் 24ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்தபோதே அது மலைகளையே நகர்த்தி பார்க்க கூடிய செயல் என்றறிந்தோம், முயற்சித்தும் பார்த்தோம். குறிப்பிட்ட தேதியில், திரைப்படம் வெளிவராததில் எங்களுக்கு ஏமாற்றம் ஒன்றுமில்லை என்று பொய் சொல்லிக்கொள்ளவும் நாங்கள் விரும்பவில்லை.
நாங்கள் இன்னும் "துருவ நட்சத்திரம்" படத்தை கைவிடவில்லை என்று உங்களுக்கு உறுதியளிப்பதற்கே இந்த குறிப்பு! நேர்ந்துள்ள எல்லா தடைகளைத் தாண்டி உங்களுக்காக துருவ நட்சத்திரத்தை திரையரங்குகளில் வெளியிட எங்களின் எல்லைகளை மீறி அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.
பார்வையாளர்களாக, ரசிகர்களாக நீங்கள் அனைவரும் எங்களின் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்குறீர்கள். உங்களிடமிருந்து வரும் அளப்பரிய அன்பும், ஆதரவும் எங்களின் முயற்சிகளுக்கு பலம் சேர்கிறது. எங்கள் இதயங்களில் நிறைந்துள்ளன, எங்கள் வலிமைக்கு தூணாக இருக்கும் உங்களுக்கு நன்றி
தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறோம்.
இந்த இறுதிக் கட்ட வேலைகளில் எங்கள் அனைவரின் எண்ணமும் துருவநட்சத்திரம் திரைப்படத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்தே இருக்கிறது. துருவ நட்சத்திரம் விரைவில் வெளிச்சம் பெரும், 'ஜான் & டீம் பேஸ்மென்ட்டின்' திரைப்பயணத்தை உங்களுடன் இணைத்து தொடங்க ஆவலுடன் இருக்கிறோம்''என்று தெரிவித்துள்ளார்.
மேலும், துருவ நட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஒன்றாக என்டர்டைன்மென்ட் நிறுவனம் கடைசி நேரத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரிலீஸ் ஆகாது என அறிவித்தது. இதற்குக் காரணம் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் வாங்கி இருந்த கடனைக் கட்டாததுதான் என தகவல் வெளியாவது குறிப்பிடத்தக்கது.