சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது கங்குவா திரைப்படம். இந்த படத்தை சிறுத்தை சிவா மிக பிரம்மாண்டமாக இயக்கி வருகிரார். இந்த கதை நிகழ்காலம் மற்றும் சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலம் என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. படத்தில் பாபி தியோல், திஷா பதானி, கே எஸ் ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் நடிக்க, வெற்றி ஒளிப்பதிவு மேற்கொள்ள, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் அடுத்தவாரம் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இந்நிலையில் இந்த படத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பெற்றக் கடன் தொகையை திருப்பித் தராததால் கங்குவா படத்தை ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம், பல திரைப்பட தயாரிப்புக்கு வாங்கிய தங்களிடம் ரூ.99.22 கோடியில் மீதமுள்ள ரூ.55 கோடியை திரும்ப வழங்காததால், கங்குவா படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துக்குத் தரவேண்டிய தொகையை திருப்பி செலுத்தியதால் கங்குவா படத்தை வெளியிடத் தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.