காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவி மணியன் மறைந்த நடிகர் விவேக் குறித்து தனது நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் விவேக்குக்கு இரங்கல் தெரிவித்து விவேக் வெளியிட்டுள்ள அறிக்கை:-
”ஒருநாள் சாலிகிராமத்திலுள்ள விவேக் வீட்டிற்கு சென்றிருந்தேன். மனம் நெகிழ்ந்து வாசலில் வரவேற்றார். ஒருமணி நேரம் இருவரும் பேசினோம். அவருடைய பல்துறை அறிவாற்றலும், மனிதநேயமும், சமூக நலனில் அவருக்கிருக்கும் உண்மையான அக்கறையும், தூய்மையான அரசியல் இந்த மண்ணில் மீண்டும் மலரவேண்டும் என்ற அவருடைய ஏக்கமும் எனக்கு வியப்பை ஏற்படுத்தின. சந்திப்பின் முடிவில், அவருடைய நினைவாக வைத்துக்கொள்ளும்படி ஒரு விலையுயர்ந்த பேனாவை எனக்களித்தார். அன்பைத்தவிர வேறு எதையும் எவரிடத்தும் நான் பெறுவதில்லை என்று மறுத்துவிட்டேன்.
பொய்த்தனமும் போலியும் மலிந்த அரசியலிலிருந்து முற்றிலும் நான் விலகுவதாக அறிவித்த அறிக்கையை வாசித்த விவேக் ”ஒரு பேனாவைக்கூட பெற மறுக்கும் ஒருவர் பொதுவாழ்விலிருந்து விலகுவதென்று எடுத்த முடிவைத் திரும்பப் பெறவேண்டும்” என்று ட்வீட் செய்து தொலைபேசியிலும் என்னை அழைத்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். என்னுடைய வழிப்போக்கனின் வாழ்க்கை அனுபவங்கள் நூலை கடந்த ஆண்டு கொரோனா சூழலில் வாசித்துக்கொண்டிருப்பதாக பதிவிட்டதோடு தொலைபேசியிலும் அழைத்துப் பேசிய விவேக், கொரோனாவின் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவுடன் நாம் அவசியம் சந்திக்கவேண்டும். நிறைய பேசவேண்டும் என்றார்.