பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் இளையராஜா 75 இசை நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொள்ள இருக்கிறார்.
இளையராஜாவை கௌரவப்படுத்தும் விதமாக தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஒன்று நடக்க இருக்கிறது. இளையராஜாவுக்குப் பாராட்டு விழா என்று சொல்லப்பட்ட்டாலும் அதன் மூலம் வரும் 10 கோடி ரூபாய் வருமானத்தை வைத்தே தயாரிப்பாளர் சங்க கஜானாவை விஷால் நிரப்ப இருப்பதாக விஷாலின் போட்டியாளர்கள் கருதுகின்றனர். இதற்கான வேலைகள் படு மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்த விழாவை நடத்த தடை விதிக்க கோரி தயாரிப்பாளர்கள் சங்க சார்பில் ஜே சதீஷ்குமார் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இது சம்மந்தமான வழக்கில் நிகழ்ச்சி தொடர்பான கணக்கு வழக்குகளை நாளைக்குள் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனால் விழா நடப்பதில் புது சிக்கல் உருவாகியுள்ளது.
ஆனாலும் விழா நடப்பது உறுதி என விஷால் தரப்பு கூறி விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக இளையராஜா 75 விழாவில் கலந்துகொள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அழைத்துள்ளனர். ஆளுநரும் இதற்கு ஒத்துக்கொண்டுள்ளார். விழாவின் முதல் நாள் ஆளுநர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து இளையராஜா 75 மலரை வெளியிட உள்ளார்.
ஆளுநர் கலந்து கொள்வதால் விழாவுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் பலமிழந்து உள்ளதாக தெரிகிறது.