தனது கட் அவுட்டுக்கு அண்டா அண்டாவாக பாலபிஷேகம் செய்யுங்கள் என சிம்பு கூறியதற்கு பால் முகவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சிம்பு ஒரு வீடியோவை வெளியிட்டார் அதில் தனது படம் வெளியாகும் தினத்தில் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைப்பது, அதற்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் அம்மாவுக்கு ஒரு புடவையோ, அப்பாவுக்கு ஒரு சட்டையோ வாங்கி கொடுத்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
சிம்புவின் இந்த வீடியோவுக்கு பெரும் பாராட்டு கிடைத்த போதிலும் ஒருசிலர் சிம்புவுக்கு இருப்பதே ஒன்றிரண்டு ரசிகர்கள் தான். இதற்கு இந்த பில்டப் தேவையா? என்று கலாய்த்தனர்.
இதனால் கடும் கோபமடைந்த சிம்பு, தனது மாஸை நிரூபிக்க ''வந்தா ராஜாவாதான் வருவேன்' பட ரிலீசின்போது எனது ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைங்க, அண்டா அண்டாவா பாலாபிஷேகம் செய்யுங்க, வேற லெவலில் கொண்டாடுங்க' என்று ஒரு வீடியோ மூலம் கூறியுள்ளார். சிம்புவின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைதளத்தில் பலர் சிம்பு என்ன லூசா? சமீபத்தில் யாரும் என படத்துக்கு கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம் என கூறிவிட்டு தற்பொழுது அவரின் தனிப்பட்ட பிரச்சனைக்கு ஏன் இப்படி ரசிகர்களை பலிகடா ஆக்குகிறார் என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சிம்புவின் இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பால் முகவர்கள் சிம்பு தனது செயலுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவோம் என கூறியுள்ளனர்.