இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கி வெளியாகவுள்ள “டேஞ்சர்ஸ்” என்ற படத்தை வெளியிட மாட்டோம் என மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தெரிவித்துள்ளன.
இந்திய சினிமாவில் பல்வேறு மொழிகளிலும் படங்களை இயக்கியவர் ராம்கோபால் வர்மா. தெலுங்கு இயக்குனரான இவர் இயக்கிய ரத்த சரித்திரம், வீரப்பன் வாழ்க்கை வரலாறு படங்கள் பெரிதும் பேசப்பட்டவை. ஆனால் சமீப காலமாக இவர் சர்ச்சைக்குரிய கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வருகிறார்.
தற்போது தன்பாலின ஈர்ப்பாளர்களை மையப்படுத்தி “டேஞ்சர்ஸ்” என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நைனா கங்குலி, அப்சரா ராணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடன் ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ஆபாசக் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதால் திரையிட மாட்டோம் என்று மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தெரிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள இயக்குனர் ராம்கோபால் வர்மா “நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட சட்டப்பிரிவின் கீழ்தான் படத்தை இயக்கியுள்ளேன். முறையாக தணிக்கை செய்யப்பட்டு ஏ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்டை வெளியிட மாட்டோம் என திரையரங்குகள் கூறுவது தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்” என்று தெரிவித்துள்ளார்.