அவ்வப்போது பல சர்ச்சைக்குரிய விஷயங்களை செய்து ட்ரெண்டாகி வரும் யூட்யூபர் இர்ஃபான், ரம்ஜானையே கண்டெண்டாக்கி மீண்டும் ட்ரெண்டாகியுள்ளார்.
தமிழில் Food Vlog செய்து பிரபலமானவர் இர்ஃபான். தற்போது ஃபுட் வ்லாகை தவிர சொந்த வாழ்க்கையை வீடியோ எடுத்து போடுவது, பிரபலங்களை இண்டெர்வியூ செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார். முன்னதாக தன் மனைவி கர்ப்பமாக இருந்தபோது அவரது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியது, பிரசவத்தின்போது தொப்புள் கொடியை அறுத்து வீடியோ போட்டது என தொடர் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.
இந்நிலையில் சமீபத்தில் ரம்ஜான் பண்டிகையின்போது ஏழைகளுக்கு உதவுவதாக கூறி தனது மாமியார் வாங்கி விற்க முடியாமல் வைத்திருந்த புடவை, கைலிகளை எடுத்துக் கொண்டு, உடன் கொஞ்சம் பணமும் வைத்து காரில் சென்றபடியே சாலைகளில் உள்ள ஏழைகளுக்கு கொடுத்து அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில் அவர் துணியும், பணமும் கொடுப்பதை பார்த்து ஓடிவந்த சிலர் காருக்குள் கையை விட்டதால் அவர்களிடம் இர்ஃபான் மோசமாக பேசியதோடு, அங்கிருந்து கடந்து வந்ததும் அவர்களை ஏளனமாகவும் பேசியுள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இர்ஃபானை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். இர்ஃபானின் இந்த செயல் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள விஜே பார்வதி “இவரு பெரிய ஜமீன் பரம்பரை. காருக்குள்ள இருந்தபடியேதான் உதவி செய்வாரு. ரத்தன் டாடா போன்றவர்கள் தங்களது சொத்துகளையே ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்கினர். ஆனால் இந்த புது பணக்காரனுங்க இருக்கானுகளே” என ஓப்பனாய் விமர்சித்துள்ளார்.
அந்த சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ள இர்பான் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால் இர்பான் இப்படி சர்ச்சை வீடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K