கங்குவா நடிகை திஷா பதானியின் இல்லத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு முக்கிய குற்றவாளிகள், சிறப்பு அதிரடிப் படையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
செப்டம்பர் 12-ஆம் தேதி அதிகாலை 3:45 மணியளவில், திஷா பதானியின் பரேலி வீட்டில் துப்பாக்கி சூடு நடந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, குற்றவாளிகளான ரவீந்திரா மற்றும் அருண் ஆகியோரை அடையாளம் கண்டது. இவர்கள் இருவரும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும், இருவரும் பிரபல ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, நொய்டா சிறப்பு அதிரடிப் படை மற்றும் டெல்லி குற்றப்பிரிவு இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. சிசிடிவி காட்சிகளை பயன்படுத்தி, குற்றவாளிகள் காசியாபாத்தில் பதுங்கியிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
நேற்று நடந்த என்கவுண்டரில், இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் ரவீந்திரா மற்றும் அருண் இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.