தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் எந்த அளவுக்கு வெற்றிப்படமோ, அந்த அளவுக்கு சர்ச்சைக்குரிய படமாகவும் மாறிவிட்டது. பொங்கல் தினத்தில் வெளிவந்த பேட்ட, விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களுமே வசூல் அளவில் வெற்றி பெற்றிருந்தாலும் தங்கள் படம் மட்டுமே வெற்றி பெற்றதாக காண்பித்து கொள்ள வேண்டும் என்பதில் இரண்டு படத்தின் தரப்புகளும் சில சில்லறை வேலைகளை செய்து வருகின்றன.
மேலும் இந்த விஷயம் ஏதோ நாட்டுக்கு முக்கியமான பிரச்சனை என்பதுபோல் தனியார் தொலைக்காட்சிகளும் இதுகுறித்து விவாத நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்பி வருகின்றன.
இந்த நிலையில் ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சியில் 'விஸ்வாசம்' வசூல் குறித்த விவாதத்தில் கலந்து கொண்ட விடுதலைச்சிறுத்தைகள் பிரமுகர் வன்னி அரசு, 'ஒரு திரைப்படம் பார்க்க பணம் கொடுக்கவில்லை என்பதற்காக பெற்ற தந்தையையே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். தியேட்டரில் கத்திக்குத்து, கட் அவுட் விழுந்து காயம் போன்ற அசம்பாவித சம்பவங்களும் நடந்துள்ளது.
இம்மாதிரியான சம்பவங்களுக்கு அந்த குறிப்பிட்ட நடிகரும் பொறுப்பேற்க வேண்டும். என்னை கேட்டால் இந்த வழக்குகளில் அஜித் மீது எப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று ஆவேசமாக கூறினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது