நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
சென்னையில்நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த டி. ராஜேந்தர், ராதாரவி, பாரதிராஜா, ஜே.கே. ரித்தீஷ், ராஜன் உள்ளிட்டோர் நடிகரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
விஷால் ஓராண்டில் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் பதவி விலகுகிறேன் என்றார். ஆனால் இதுவரை அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஒரு படத்திற்கு 200 தியேட்டர்கள் தான் ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி கூறிவிட்டு,அவர் நடித்த இரும்புத்திரை படத்துக்கு மட்டும் 300-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட்டிருப்பது எப்படி நியாயமாகும் என கேள்வி எழுப்பினர்.
துப்பறிவாளன் படத்தில் நடித்து விட்டால் நீ என்ன பெரிய துப்பறிவாளனா என டி.ராஜேந்தர் ஆவேசமாக பேசினார். மேலும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளாக தமிழர்கள் வரவேண்டும் என நடிகர் ராதாரவி கூறினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றாத விஷால் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.