Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்க இத்தன பேர் இருக்கும்போது மிஷ்கின் ஏன் என்னை தேர்ந்தெடுத்தார்… பிசாசு 2 ஒளிப்பதிவாளர் பதிவு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (07:32 IST)
மிஷ்கின் இயக்கும் பிசாசு 2 படத்தில் லண்டனில் வசிக்கும் ஈழத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர் சிவசாந்தகுமார் என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மிஷ்கின் படங்களில் ஒளிப்பதிவு தெரியும். ஆனால் தமிழ்நாட்டில் பல ஒளிப்பதிவாளர்கள் இருக்கும்போது லண்டனைச் சேர்ந்த ஒருவரை ஏன் மிஷ்கின் ஒப்பந்தம் செய்துள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலளிக்கும் விதமாக சிவசாந்தகுமார் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் ‘என்னை ஏன், எப்படி, இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்துக்கான ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுத்தார் என்னும் கேள்வி ஈழம் சினிமாச் செயற்பாட்டாளர்கள் மத்தியில் மட்டுமின்றி தமிழ்நாட்டு சினிமாத் துறை வட்டாரத்திலும் எழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது. உண்மையில் இது ஒரு நியாயமான கேள்வியே. நான் பார்த்து பிரமிக்கும், பல ஒளிப்பதிவாளர்களையும் அவர்களிடமிருந்து ஓளிப்பதிவுக் கலையை முறைப்படி பழகிக் கொண்ட திறமை வாய்ந்த பல நூறு சீடர்களையும் போதியளவு கொண்டிருக்கிற ஒரு சமுத்திரம் தமிழ்நாட்டு திரைப்படதுறை. அவர்கள் அனைவருமே என்னைவிடவும் திறமைசாலிகள் மட்டுமின்றி தமிழநாட்டுச் சினிமாவின் தேவையையும் அதன் பண்பையும் இரத்தமும் சதையுமாக உணர்ந்தவர்கள்.

இந்நிலையில் இயக்குனர் மிஷ்கின் என்னை லண்டனில் இருந்து வரவழைத்திருப்பது அவருக்கு மிகவும் சவாலான விடயம் மட்டுமல்ல பல இடையூறுகளையும் அவருக்கு ஏற்படுத்தக் கூடியது என்பதை நான் உணர்வேன். இதை இயக்குனர் மிஷ்கின் அவர்களும் முன் கூட்டியே அறியாமலில்லை. தயாரிப்பாளர்களின் கேள்விகளுக்கான பதில், திரைப்படச் சங்கம் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்க விதிகள், வரையறைகள், ஏற்கனவே அவருடைய படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர்கள், புதிய வாய்ப்புக்காக வருடக் கணக்காக அவரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பல புதிய ஒளிப்பதிவாளர்கள். இவற்றுக்கும் அப்பால், ஒரு அந்நியமான சூழலில், முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு குழுவுடன் வேலை செய்வதில் எனக்கிருக்கக் கூடிய சிக்கல்கள். பேசும் மொழி சார்ந்த பிரச்சினைகள். முற்று முழுதாக புதியவனான என்னுடன் வேலை செய்வதில் இயக்குனர் மிஷ்கின் அவர்களின் உதவியாளர்கள், தொழில்நுட்பக் குழுவினர், தயாரிப்பு நிர்வாகிகளுக்கு இருக்கக் கூடிய புரிந்துணர்வுப் பிரச்சினைகள் என பல நடைமுறைச் சிக்கல்கள், தர்மசங்கடங்கள், சட்ட விதிககள், செண்டிமெண்ட்கள், சிக்கல்கள் மத்தியிலேயே இயக்குனர் மிஷ்கின் என்னை பிசாசு 2 படத்தின் ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுத்தார் என்பதையும் நான் அறிவேன்.

இவ்வளவு சங்கடங்கள் சவால்கள் மத்தியில் என்னைத் அவர் தேர்ந்தெடுக்கும் அளவுக்கும் நானொரு அசாதாரண திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர் அல்ல என்பதையும் நானறிவேன். என்னை விடப் பல மடங்கு திறமை வாய்ந்த, பல புதிய ஒளிப்பதிவாளர்கள் தமிழ்நாட்டுத் திரைப்பட துறையில் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். உண்மையைச் சொன்னால் நான் போதிய அனுபவம் மிக்க சிறந்த ஒளிப்பதிவாளர் என்பதற்கான எந்தவித பௌதீக ஆதாரமோ, நிச்சயமோ அற்ற நிலையிலேயே இயக்குனர் மிஷ்கினர் என்னை பிசாசு 2 படத்தின் ஒளிப்பதிவாளராகத் தேர்ந்தெடுத்தார். இவ்வளவுக்கும் எனக்கும் இயக்குனர் மிஷ்கினுக்கும் இடையிலான பழக்கம் மிகக் குறைந்த காலங்களே.

இக்காலப் பகுதியில் எனக்கு வாய்ப்புத் தரும்படி அவருக்கு வேண்டுக்கோளுக்கு மேல் வேண்டுகோள் விடுக்கவும் இல்லை. அத்தகைய தொல்லை கொடுக்கும் அணுகுமுறையைக் கொண்ட ஆளும் அல்ல நான். அல்லது குறுக்கு வழியில் அவரது மனதில் இடம் பிடித்தவனும் அல்ல. அவ்வாறான வழி முறைகள் இயக்குனர் மிஷ்கினுடன் வாய்க்காது என்பதை அவரை அறிந்தவர்கள் அறிவார்கள். எந்த தந்திரங்களோ மந்திரங்களோ, நான் செய்ததும் இல்லை. அவற்றில் அறவே நம்பிக்கையற்றவன் நான் என்பதை என்னை அறிந்தவர்கள் நன்கு அறிவர்.

அந்த வகையில் எந்த அடிப்படையில் இயக்குனர் மிஷ்கின் என்னைத் தேர்ந்தெடுத்தார் என இங்கு எழுந்துள்ள கேள்வி நியாயமானதே! இந்தக் கேள்வியை என்னிடம் நேரில் யாரும் கேட்காதவிடத்தும் அதற்கான பதிலைச் சொல்வது அல்லது விளக்கத்தை அளிப்பது இறுதிக் காலம் வரை சினிமாக்காரனாகவே ஜீவித்திருக்க வேண்டும் என்ற வெறியோடு இருக்கும் எனக்குக்குரிய கடமைப்பாடாக நான் உணர்கிறேன். இந்தப் பதிலும் விளக்கமும் ஈழம் சினிமா வளர்ச்சிக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுச் சினிமாவுக்கும் ஆரோக்கியமாக இருக்கும் எனவும் நான் நம்புகிறேன்.

உண்மையைச் சொன்னால், நான் இங்கு வந்து இயக்குனர் மிஷ்கினுடன் பிசாசு 2 படத்தில் வேலை செய்யும் வரைக்கும் எனக்கும் இது ஒரு புரியாத புதிராகவும் அதிசயமாகவுமே இருந்தது. ஆனால் அவருடன் வேலை செய்யத் தொடங்கிய சில நாட்களிலேயே நான் அதற்கான பதிலை அறிந்து கொண்டேன்...அதற்கான ஒரு வரிப் பதில் இதுதான்:

இயக்குனர் மிஷ்கினுக்கு வேண்டியது அசாதாரண திறமையுள்ள ஒரு ஒளிப்பதிவாளர் அல்ல அவருக்கு வேண்டியது அசாதாரண முறையில் அவருடன் தொடர்பாடல் செய்யக் கொள்ளக் கூடிய ஒரு சாதாரண ஒளிப்பதிவாளரே. இயக்குனர் மிஷ்கினுக்கு வேண்டியது அசாதாரண திறமையுள்ள ஒரு ஒளிப்பதிவாளர் அல்ல எனச் சொல்கிறேன். ஏனெனில், ஒரு திரைப்படத்தின் காட்சிகளை, அதன் கோணங்களை, கேமராவின் அசைவை, ஷொட்களின் பரப்பளவை, நேர அளவை, அதன் ஒளியமைப்பை, ஒட்டு மொத்த அழகியலை, அந்த அழகியல் ஏற்படுத்த வேண்டிய எமோஷனை என அனைத்து விடயங்களையும் முன்கூட்டிய கச்சிதமாக திட்டமிட்டுத்தான் மிஷ்க்கின் படப்பிடிப்புக்குள் நுழைகிறார்.

தன்னுடைய படத்தை முன்கூட்டியே இரத்தமும் சதையுமாக காட்சியாக அவர் மனக்கண்ணில் பார்த்து விட்டுத்தான் அதை படமாக்குகிறார். ஒரு ஒளிப்பதிவாளரிடமிருந்து தனக்கு என்ன வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருக்கிறார். எந்த ஒரு மேலதிக ஷாட்களையோ, டேக்குகளையோ அவர் எடுப்பதில்லை. ஒவ்வொரு ஷாட்டும் எங்கே தொடங்கி எங்கே முடிய வேண்டும் என்பதை கூர்மையாக தெரிந்து வைத்திருக்கிறார். உண்மையைச் சொன்னால், ஒரு ஒளிப்பதிவாளராக நான் அங்கு என் மூளையப் பிழிய வேண்டிய அவசியம் ஏதுமில்லை. உண்மையில் இதுவே ஒரு மிகச் சிறந்த இயக்குனரின் பண்பும் திறமையும் என நான் கருதுகிறேன்.

இயக்குனர் தன் மனக் கண்ணில் காணும் காட்சிகளை அப்படியே கேமராவில் பதிவு செய்து கொடுப்பதே ஒரு ஒளிப்பதிவாளரின் கடமை எனவும் நான் நம்புகிறேன். ஆனால், அங்குதான் நான் மேலே கூறிய “அசாதாரண் முறையில் தொடர்பாடல் செய்யக் கூடிய பண்பு” அவசியமாகிறது. “அசாதாரண முறையில் தொடர்பாடல் செய்வது” என்பது வாய்மொழித் தொடர்பாடலின்றி அல்லது குறைந்தப்டச வாய் மொழிச் சொற்கள் மூலம் விடயங்களைப் பகிர்வது ஆகும். ஒற்றைச் சொல்லில் அல்லது ஒரு சமிக்ஞையில், அல்லது ஒரு பார்வையில் அல்லது முகபாவத்தில் பரஸ்பரம் விடயங்களை பகிர்வது.

ஒரு படப்பிடிப்புக் களம் என்பது ஒரு போர்க்களத்தைப் போன்றது. இங்கு நீண்ட நேர வாய்மொழி உரையாடல்களோ, விவாதங்களோ, வியாக்கியானங்களோ செய்து கொண்டிருக்க முடியாது. குருசேத்திரப் போரில் அர்ச்சுனனுக்கு அவனது மனதில் எழுந்த கேள்விகளுக்கு கிருஷ்ணன் தன் மனதுக்குள் சொன்ன பதிலே பகவத் கீதை எனப்படுகிறது. அதை நான் முதலில் நம்பவில்லை. ஆனால் இயக்குனர் மிஷ்கினுடன் வேலை செய்ய ஆரம்பித்த பிறகு அத்தகைய தொடர்பாடல் சாத்தியம் என்று கண்டு கொண்டேன். இந்த வகை ஆழ்மனத் தொடர்பாடல் ஒளியை விடவும் வேகமானது. சில கணங்களுக்குள் பல விடயங்களை பரஸ்பரம் பகிர முடியும்.

உண்மையில் போர் முனையில் நின்றபடி அத்தகைய நீண்ட கீதா உபாசாரத்தை வாய்மொழி மூலம் செய்வதற்கான சாத்தியப்பட்டு இருந்திருக்க முடியாது. இத்தகைய ஆழ்மன தொடர்பாடல் மூலமாக மட்டுமே அது சாத்தியமாகியிருக்கும் என நான் நம்புகிறேன். அந்த வகையில் ஒரு இயக்குனருரின் தேவையை வார்த்தைகளின்றி உணர்ந்து கொள்ளும் என் திறனும், அதிகம் பேசாத, ஒரிரு சொற்கள், சமிக்ஞைகள் மூலம் தொடர்பாடும் என் இயல்பான குணமுமே இயக்குனர் மிஷ்கின் என்னை பிசாசு 2 படத்துக்கு ஒளிப்பதிவாளராகத் தேர்வு செய்யக் காரணம் என நான் நம்புகிறேன்.

இத்தகைய தொடர்பாடல் ஒன்றும் அசாதாரண விடயமும் அல்ல. ஒரே நோக்கத்துக்காக சொந்த விருப்பு வெறுப்புகளைத் துறந்து தம்மை முழுமையாக அர்ப்பணிக்கின்ற எவருக்கும் இடையில் இது நிகழக் கூடியது. ஈழவிடுதலைப் போர்க்களத்தில் இவ்வாறான தொடர்பாடல்கள் மிகச் சர்வசாதாரணமாக நடந்துள்ளன. என்னிடத்தில் இத்தகையை தொடர்பாடல் வளர்ச்சியடைந்த நிலையில் முன்னர் இருந்ததில்லை. அது ஒரு முளை நிலையில் அல்லது உறங்கு நிலையிலேயே இருந்தது. அதை அடையாளம் கண்டு என்னை தேர்ந்தெடுத்து அதைச் செயல் நிலைக்குக் கொண்டு வந்தவர் இயக்குனர் மிஷ்கின் அவர்களே.

அந்த வகையில் அவரை எனது குருவாகவே நான் பார்க்கிறேன். அவருக்கும் எனக்கும் இடையிலான உறவு குருவுக்கும் சீடனுக்கும் இடையில்லானது. அந்த குரு சீட உறவு (Master Disciple Relationship) கிருஷ்ணனுக்கும் அர்ச்சுனனுக்கும் இடையிலான உறவு போன்றது. ஏனெனில் அதற்குள் நட்பும் இருக்கிறது. பல வெற்றிகரமான சினிமா இயக்குனர்களை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டுச் சினிமா தனக்கான சினிமா மாஸ்டர்களையும் காலத்துக்குக் காலம் உருவாக்க வேண்டியுள்ளது. மாஸ்டர் என்பவர் வெற்றியை நோக்கி ஓடுபவராக இருக்க முடியாது. வெற்றி தோல்விகளுக்கு அப்பால், சினிமாவின் விஞ்ஞானத்தை அதன் சகல பரிமாணங்களிலும் புரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகள் இன்றி ஒரு சினிமாகாரனாக தனது வாழ்க்கையை வாழ்வதிலும் அதற்காகவே தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அர்பணிப்பதிலும் முழுமையான திருப்தியை அனுபவிப்பராக இருக்க வேண்டும்.

அத்தகைய ஒரு -சினிமாத் துறவியாலேயே ஒரு சினிமா மாஸ்டராக முடியும். அத்தகைய ஒரு சினிமாத் துறவியாகவே நான் இயக்குனர் மிஷ்கின் அவர்களைப் பார்க்கிறேன். அந்த வகையில் தமிழ்நாட்டுச் சினிமாவின் மாஸ்டர் ஆக இருக்கக் கூடிய சகல பண்புகளும் இயக்குனர் மிஷ்கின் அவர்களுக்கு உள்ளது என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.
அத்தகைய மாஸ்டர் ஒருவர் என்னைத் தனது ஒளிப்பதிவாளராக, சீடனாக ஏற்றுக் கொண்டதற்கான நன்றியை வார்த்தைகளால் என்னால் சொல்ல முடியாது. இந்த வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த பிரபஞ்ச சக்திக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்த எழுத்தாளர் ஜமுனா ராஜேந்திரன் அவர்களுக்கு எனது நன்றிகள். முன்பின் அறிமுகம் இல்லாத என்னோடு மிகவும் அன்போடும், பண்போடும், ஆதரவோடும், பொறுமையோடும் பணியாற்றிக் கொண்டிருக்கும் பிசாசு 2 படப்பிடிப்பு தயாரிப்புக் குழுவினர், உதவியாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஒரு ஒளிப்பதிவாளராக வளர்த்துக் கொள்ள எனக்கு ஆரம்ப வாய்ப்புகள் தந்த ஈழம் சினிமாப் படைப்பாளிகள், இயக்குனர்கள், செயற்பாட்டாளர்களுக்கும் எனது இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கங்குவா' நாளை திட்டமிட்டபடி வெளியாகுமா? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments