சர்ச்சையைக் கிளப்பிய காட்மேன் சீரிஸ் தங்கள் தளத்தில் வெளியாகாது என ஜீ 5 தெரிவித்துள்ளது.
ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் “காட்மேன்” என்ற வெப் சிரீஸ் ஜுன் 12ல் வெளியாவதாக இருந்தது. இதில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் மற்றும் ஜெயப்ரகாஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த டீசரில் காட்டப்பட்டு இருந்த காட்சிகள் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த சீரிஸை தடை செய்யவேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.
பாஜகவின் முன்னணி தலைவர்களான எல் முருகன் மற்றும் நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோரும் இந்த தொடரை வெளியிட அனுமதிக்க கூடாது என கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்றொரு தலைவரான சுப்ரமண்ய சுவாமி நேரடியாக ஜீ 5 உரிமையாளரிடமே நேரடியாக பேசியதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக காட்மேன் இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிறுவனம் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜீ5 நிறுவனம் தங்கள் டுவிட்டரில், "எங்களுக்கு வந்த பல கருத்துகளின் காரணமாக தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது" எனக் கூறியுள்ளனர்.