Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

ராக்கெட்ரி படத்தைப் பார்த்து மாதவனைப் பாராட்டிய சீமான்

ராக்கெட்ரி படத்தைப் பார்த்து மாதவனைப் பாராட்டிய சீமான்
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (08:51 IST)

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ராக்கெட்ரி படம் குறித்து தன்னுடைய பாராட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இது சம்மந்தமாக சீமான் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் ‘அன்புத்தம்பி மாதவன் அவர்கள் தயாரித்து, இயக்கி, நடித்து வெளிவந்துள்ள ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படம் பார்த்து மிகவும் ரசித்தேன் . முதலில் இப்படி ஒரு கதையைத் தேர்வு செய்து அதைத் திரைப்படைப்பாக உருவாக்கியதற்காகத் தம்பிக்கு என் வாழ்த்துகள். அசல் மனிதர்களின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்கும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்களைத் திறமையாகக் கையாண்டு ஒரு காட்சியிலும் கூடப் பார்வையாளர்களுக்குத் துளியளவு சோர்வினை ஏற்படுத்தாமல் பரவச விருந்தாக ராக்கெட்ரி மாறி இருப்பது கண்டு மனம் மகிழ்ந்தேன்.

திரைப்பட உருவாக்கத்தில் நடிகர்களுக்கு அவர்கள் ஏற்கும் கதாப்பாத்திரங்களின் தோற்றம், உளவியல், சமூக வாழ்நிலை ஆகிய முப்பரிமாணங்களையும் முழுமையாகப் புரிய வைத்து தேவையான அளவில் நடிப்பை வெளிக்கொண்டு வருவதிலும், அதுபோலவே பிற தொழில்நுட்ப கலைஞர்களிடமிருந்து சிறந்த படைப்பாற்றலை பெற்று ஒருங்கிணைப்பதிலும்தான் ஓர் இயக்குநரின் திறன் தீர்மானிக்கப்படும். அவ்வகையில் தம்பி மாதவன் தனது திரைக்கலைத் திறனை ஓர் இயக்குநராகவும் இப்படத்தில் சிறப்பாக வெளிப்படுத்தி வியக்கச் செய்கிறார். அதிலும் எளிய திரைப்படப் பார்வையாளனுக்குப் புரியாத கடினமான அறிவியல் செய்திகளை எளிமையாக்கி தன் நேர்த்தியான இயக்கத்தால் இந்தத் திரைப்படத்தை ஒரு உலகத் திரைப்படமாக மாற்றி இருக்கிறார்.  என் தம்பி என்பதற்காகக் கூறவில்லை, ஒரு திரைப்பட நடிகராக ஏற்கனவே பல திரைப்படங்களில் தன் திறமைகளை நிரூபித்துக் காட்டிய தம்பி மாதவன் தான் இயக்கிய முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார்.

திரைப்பட இயக்கம் என்கிற பெரும் பணியோடு, இந்திய பெரு நிலத்தின் தலைசிறந்த விண்வெளி விஞ்ஞானி தமிழினத்தில் தோன்றிய மகத்தான அறிவியல் மேதை நம்பி நாராயணனின் உருவ மொழியைச் சிறு சிறு அசைவுகள் மூலம் அவரையே அப்படியே பிரதிபலித்து இளமை, முதுமை என்று வெவ்வேறு வயது தோற்றங்களுக்கு ஏற்ப உடலைக் குறைத்து, அதிகமாக்கி நடித்துள்ள தம்பி மாதவனின் பிரமிக்க வைக்கும் பேராற்றல் கொண்ட நடிப்பு இத்திரைப்படத்தைக் காலம் கடந்து நிலைத்து நிற்கும் மிக முக்கியப் படைப்பாக்கி இருக்கிறது.

இந்நாட்டை நேசித்து நின்ற விஞ்ஞானி நம்பி நாராயணன் பொய் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி காவல்துறை விசாரணைகளுக்கு உட்படும்போது படுகின்ற வேதனைகளை அதே வலியோடு காட்சிப்படுத்தி, திரைப்படம் பார்க்கின்ற நமக்கும் அந்த வலியை கடத்துவதோடு மட்டுமில்லாமல், அறிவியல் துறையிலும் அரசியலின் ஆதிக்கம் குறித்து இத்திரைப்படம் சிந்திக்க வைக்கிறது. குறிப்பாக உடல் நலிவுற்ற மனைவியோடு கொட்டும் மழையில் வாடகை வாகனத்திற்காக அலையும் காட்சிகளும், பொய் குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் நம்பி நாராயணனின் குடும்பம் எவ்வாறெல்லாம் அலைகழிக்கப்படுகிறது, அவமானப்படுத்தப்படுகிறது என்பதையெல்லாம் நம்பி நாராயணனின் வாழ்க்கைப் பக்கங்களுக்கு மிக நெருக்கமாக நின்று காட்சிப்படுத்தியிருப்பது நெகிழ வைக்கிறது.

எது உண்மை என்று விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே பொய் வழக்குப் போடும் காவல்துறைக்கும், ஒரு நிரபராதி மனிதனை பல ஆண்டுகள் அலைய வைத்து நீதிக்காகப் போராட வைக்கிற அநீதி நிறைந்த அதிகார அமைப்புகளுக்கும் தன் வசனங்கள் மூலம் சவுக்கடி கொடுத்து ஒரு தேர்ந்த இயக்குநராக நிருபித்துள்ளார் தம்பி மாதவன். அதிகார வர்க்கமும், ஆட்சியாளர்களும் நினைத்தால் பொய், அவதூறுகள் மூலமே எவ்வளவு உயரத்தில் இருப்பவரையும் எளிதாக வீழ்த்திவிட முடியும் என்பதனையும் எல்லாவற்றையும் ஆராயாது அப்படியே ஏற்று எதிர்வினையாற்றும் பொதுச்சமூக உளவியல் போன்ற இந்த நாட்டிற்கே உரித்தான சகல விதமான சாபக்கேடுகளையும் அழுத்தமான காட்சியமைப்புகள் மூலம் தோலுரித்துள்ளது மிகச்சிறப்பு.

விஞ்ஞானியின் மனைவியாக வரும் சிம்ரன் அவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்புப் படத்திற்கு உயிரோட்டம் அளிக்கிறது. சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள அன்புத்தம்பி சூர்யா அவர்கள், தமது இயல்பான நடிப்பின் மூலம் வழக்கம்போல் ரசிகர்களின் மனதினை கொள்ளைகொள்கிறார். சிர்ஷா ரே’வின் ஒளிப்பதிவும், சாம் சி எஸ் அவர்களின் விறுவிறுப்பான பின்னணி இசையும் படத்திற்கு மேலும் வலிமை சேர்க்கின்றன. இந்திய விண்வெளித் துறைக்குப் பெரும் பங்காற்றிய பெருமதிப்பிற்குரிய பெருந்தமிழர் நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று ஆவணமாக வெளியாகிருக்கும் ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ படத்தினை ஒவ்வொரு தமிழரும் பார்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். கண் கலங்கி, நெகிழ வைப்பதோடு மட்டுமன்றி சிந்திக்க வைக்கின்ற மகத்தான படைப்பாக “ராக்கெட்ரி” திகழ்கிறது என மனதார பாராட்டி என் தம்பி மாதவனைப் பெருமிதத்தோடு கட்டி அணைக்கிறேன்.

அநீதிக்கு எதிராக எத்தனை துன்பம் வந்தாலும், இடையூறு வந்தாலும், அவமானங்கள் ஏற்பட்டாலும் கடைசிவரை போராடி வென்ற ஐயா நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தறிந்து கொள்ள வேண்டிய வாழ்வியல் பாடம். தம்பி மாதவன் இதுபோன்ற மகத்தான கலைப்படைப்புகளைத் தொடர்ந்து தரவேண்டுமென்ற என்ற எனது பெருவிருப்பத்தைத் தெரிவித்து, ‘ராக்கெட்ரி – நம்பி விளைவு’ திரைப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது உளப்பூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ எனப் பாராட்டியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லால் சிங் சத்தா படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்?... நாக சைதன்யா கூறிய பதில்!