உலகக்கோப்பை கால்பந்து போட்டி நேற்று பிரமாண்டமாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது நேற்றைய முதல் போட்டியில் ரஷ்ய அணி, சவுதி அரேபியா அணியை 5-0 என்ற கோல்கணக்கில் வென்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று எகிப்து மற்றும் உருகுவே அணிகளுக்கு இடையே போட்டி நடந்தது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டி சற்றுமுன் முடிந்தது.
எகிப்து, உருகுவே ஆகிய இரு அணிகளுமே பலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் கோல் போட முயற்சி செய்தபோதிலும் எதிரணி கோல்கீப்பர்கள் கோல்களை தடுத்ததால், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் போடவில்லை.
இந்த நிலையில் போட்டி முடிவடைய சில நிமிடங்கள் இருக்கும்போது உருகுவே அணியின் ஜோஸ் மரியா ஜமினெஸ் என்ற வீரர் ப்ரீகிக் வாய்ப்பை பயன்படுத்தி சரியாக கோல் போட்டதால் 1-0 என்ற கோல்கணக்கில் உருகுவே அணி வென்றது.
உருகுவே அணி உலகக்கோப்பை போட்டியில் விளையாடும் முதல் போட்டியில் வெற்றி பெறுவது கடந்த 1970ஆம் ஆண்டுக்கு பின்னர் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.