2018-19 ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. 2019 பொதுத்தேர்தலுக்கு முன்னர் நடக்கும் கடைசி பட்ஜெட் தாக்கல் என்பதால் மத்திய அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாளும்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவரின் உரையுடன் துவங்கியது. மேலும், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்ட 20 முக்கியமான அம்சங்களை காண்போம்....
# நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி 2018-19 ஆம் நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக இருக்கும்.
# இந்தியா விரைவில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடு என்ற அடையாளத்தை பெறும்.
# நடப்பு 2017-18 ஆம் நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதமாகவே இருக்கும்.
# அடுத்த நிதியாண்டில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், அதை கட்டுப்படுத்த கொள்கை கண்காணிப்பு தேவைப்படும்.
# வேளாண்மைக்கு ஊக்கம் அளித்தல், ஏர் இந்தியா தனியார் மயம், அரசு வங்கிகளுக்கு மறுமுதலீடு ஆகியவற்றுக்கு கொள்கை வகுக்க வேண்டும்.
# மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளில் வரி வசூல் குறிப்பிடத்தகுந்த அளவு குறைவாக இருக்கிறது.
# மறைமுக வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக, ஜிஎஸ்டி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
# பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நிதி சேமிப்பு ஊக்கமளிக்கப்பட்டுள்ளது.
# வாராக்கடனை சமாளிக்க திவால் சட்டம் தீவிரமாக பயன்படுத்தப்படுகிறது.
# 2017-18 ஆம் ஆண்டில் நாட்டில் சில்லரை விற்பனை பணவீக்கம் 3.3 சதவீதமாக இருக்கிறது. இது கடந்த 6 ஆண்டுகளைக் காட்டிலும் குறைவாகும்.
# நீதித்துறையில் இருக்கும் காலதாமதம், வழக்குகள் தேக்கம், ஆகியவற்றை களைவது அவசியம்.
# நகர்மயமாதல் காரணமாக, விவசாயத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.
# நடப்பு நிதி ஆண்டில் விவசாயிகளுக்கு வட்டி கழிவு தொகையாக ரூ.20,339 கோடி வழங்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
# 2017-18 ஆம் ஆண்டில் நாட்டின் சேவைதுறை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
# சர்வதேச வர்த்தகத்தில் இந்தியாவில் ஏற்றுமதி சிறப்பாக செயல்பட்டு வலிமையுடன் இருக்கிறது.
# தொழிலாளர் சட்டங்களில் தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட வேண்டும்.
# ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம், கிராமங்களில் கழிவறை வசதி 39 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
# கல்வி, சுகாதாரத்துடன் கூடிய முழுமையான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புக்கு முன்னுரிமை தரப்படும்.
# நாட்டில் நிலவும் கடுமையான காற்று மாசை குறைக்க மத்திய அரசுடன், மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
# 2017-18 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில் பாலினம் தொடர்பான விஷயங்கள் பிங்க் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.